7 Years of Kodi: இரட்டை வேடத்தில் கலக்கிய தனுஷ்.. வில்லியாக மிரட்டிய த்ரிஷா.. கொடி படம் ரிலீசாகி 7 வருஷமாச்சு..!
நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கொடி” படம் வெளியாகி இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கொடி” படம் வெளியாகி இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.
துரை செந்தில் குமாருடன் கூட்டணி
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மீண்டும் இந்த கூட்டணி காக்கி சட்டை படத்தில் இணைந்தது. இப்படியான நிலையில் தனுஷை வைத்து தனது 3வது படத்தை துரை செந்தில்குமார் இயக்கினார். அது தான் “கொடி”. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
மேலும் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், கருணாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
எஸ்.ஏ. சந்திரசேகர் தலைவராக இருக்கும் கட்சியின் அடிமட்ட தொண்டன் கருணாஸ். வாய் பேச முடியாத அவருக்கு கொடி, அன்பு என இரட்டை குழந்தைகள். கட்சிக்காக கருணாஸ் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலையில், கொடி அப்பாவை போல அரசியல்வாதியாகிறார். இன்னொருவரான அன்பு பேராசியராக இருக்கிறார். கொடிக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் ருத்ராவுடன் காதல் இருக்கிறது. அதேசமயம் அன்புவுக்கு போலி கோழி முட்டை விற்பனை செய்யும் அனுபமாவுடன் காதல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் கொடியும், ருத்ராவும் இடைத்தேர்தலில் எதிரெதிர் வேட்பாளராக போட்டியிடும் நிலை வருகிறது. இது வாழ்க்கையை பாதிக்கும் என்பதை கருதியும், இருவரும் தங்கள் வெற்றியை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள். இது அவர்களிடையே உரசலை ஏற்படுத்துகிறது.அதிகார போதையில் இருக்கும் ருத்ரா, தேர்தல் வெற்றிக்காக கொடியையே கொலை செய்கிறார். அண்ணனின் மரணம் தம்பி அன்புவை வெகுவாக பாதிக்கிறது. அவர் அண்ணன் பாதையில் செல்ல நினைப்பதோடு, அவரின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டறிய நினைக்கிறார். இதில் த்ரிஷா சிக்கினாரா? இல்லை தன் தவறை மறைக்க என்னென்ன குற்றமெல்லாம் செய்தார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
தாடி வைத்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி
இரட்டை வேடங்களை காட்ட இயக்குநர் துரை செந்தில்குமார் பெரிதும் மெனக்கெடவில்லை. தாடி வைத்தால் அண்ணன் தனுஷ், இல்லாவிட்டால் தம்பி தனுஷ் என வெரைட்டி காட்டியிருந்தார். ஆனால் காட்சிகளில் பெரிதும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததால் இப்படம் ரசிகர்களை கவரவே இல்லை. பல படங்களில் பார்த்த அரசியல் பிரச்சினைகளை சில பல பிரச்சினைகளோடு இணைத்திருந்தனர்.
அதற்கு மாறாக முதல்முறையாக தனுஷூடன் நடித்திருந்த த்ரிஷா மிரட்டலான வில்லியாக தோன்றியிருந்தார். ருத்ரா என்ற பெயருக்கேற்ப தனுஷை கொல்லும் இடத்தில் அதிகார போதை எப்படியெல்லாம் ஒருவரின் கண்ணை மறைக்கும் என்பதை சூப்பராக காட்டியிருப்பார். அனுபமாவுக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் பாடல் காட்சிகளில் கவர்ந்தார். சந்தோஷ் நாராயணினின் இசை படத்துக்கு பலமாக அமைந்தது.
முதலில் இப்படத்தில் ஸ்ரேயா சரண் மற்றும் வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின் ஹீரோயினாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அனுபமா கேரக்டரில் முதல் சாய்ஸாக லட்சுமி மேனன், ரகுல் ப்ரீத் சிங், மடோனா செபாஸ்டியன், ஷாமிலி ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.