Captain Miller Trailer: ரத்தமும் தோட்டாக்களும் நிறைந்த கேப்டன் மில்லர் ட்ரெய்லர்.. டெவிலாக மாறிய தனுஷ்!
Captain Miller Trailer: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர்
ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2023ஆம் இறுதியில் முடிவடைந்தது. சென்னை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சித்தார்த்தா நுனி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். உமாதேவி, கபேர் வாசுகி பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து பேசிய தனுஷ் ‘ பெரும் அர்பணிப்பும் , மிருகத்தனமான உழைப்பை இந்தப் படத்தில் செலுத்தியிருக்கிறோம். இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் “ என்று கூறினார்.
ட்ரெய்லர்
இந்தப் படத்தை மிருகத்தனமான உழைப்பு போட்டு தனுஷ் குறிப்பிட்டதற்கு சான்றாக இருக்கிறது ட்ரெய்லர். ஒவ்வொரு காட்சியிலும் நாம் தனுஷை புதிய தோற்றத்தில் பார்க்க முடிகிறது. மேலும் அதிதி பாலன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் இணைந்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம். ரத்தம், அடிதடி குண்டு வெடிப்பு , துப்பாக்கி தோட்டா என வன்முறைக் காட்சிகளால் நிறைந்துள்ளது கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர். ஹைலைட்டாக கடைசியில் ஐ ஆம் தி டெவில் என்று தனுஷ் பேசும் வசனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் ஜி.வி பிர்காஷின் பின்னணி இசை படத்திற்கு பயங்கரமான ஒரு தன்மையைக் கொடுக்கிறது.
1930 களில் நடக்கும் நிகழ்வுகளாக இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை நிஜ சம்பவங்கல் இல்லையென்று முழுக்க முழுக்க கற்பனையான ஒரு கதையை எடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் வெளியீடுகள்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் படம் தவிர்த்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் , அருண் விஜய் நடித்துள்ள மிஷன் , மற்றும் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்டப் படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போதைய நிலையில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.