DD3 : தனுஷ் இயக்கத்தில் சரத்குமார்! நாளை மறுநாள் படத்தின் டைட்டில் அறிவிப்பா?
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் அப்டேட் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
தனுஷ்
தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் தனுஷ். நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் படம் பவர் பாண்டி. இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். வயோதிக காதல் கதை ஒன்றை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் அமைந்தது.
D50
தற்போது தனுஷ் தனது 50 படத்தை நடித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ், அனிகா சுரேந்திரன், ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் . மேலும் இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
DD3
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியானது. தனுஷ், சரத்குமார், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்டோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. தன் தங்கையின் மகன் வருணை இப்படத்தில் தனுஷ் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், மேலும் பல புது நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தப் படம் குறித்த கூடுதலான தகவல்களை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், நாளை மறுநாள் அந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#DD3 Announcement@dhanushkraja @theSreyas pic.twitter.com/z3x7Ofhrxo
— Wunderbar Films (@wunderbarfilms) December 22, 2023
கேப்டன் மில்லர்
தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார் , சந்தீர் கிஷன், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது கேப்டன் மில்லர்.
இந்தப் படத்தை மொத்தம் மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1930 முதல் 1940 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையே கேப்டன் மில்லர். தன்னுடைய விடுதலைக்காக போராளியாக மாறும் ஒரு சாதாரண மனிதனின் கதையே கேப்டன் மில்லர் படத்தின் சாராம்சம் என்று அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று வரையறுக்க முடியாத இயல்புடையதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இது தவிர்த்து தனுஷ் நடித்த மயக்கம் என்ன , 3 உள்ளிட்டப் படங்கள் சமீபத்தில் திரையரங்கத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும் திரையரங்கத்திற்கு லாபத்தை அளித்துள்ளன.