4 Years of Asuran: "படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது” .. பாராட்டை பெற்ற கிளைமேக்ஸ்.. அசுரன் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு..!
நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்த படமான “அசுரன்” வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்த படமான “அசுரன்” வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரின் பொல்லாதவன் படம் தவிர்த்து மற்ற படங்களை அவருக்குள் இருக்கும் கலை மீதான ஆர்வத்தை வெளிக்காட்டி விடும். ஆரம்ப காலக்கட்டங்களில் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்த தனுஷ், வெற்றிமாறனுடன் இணைந்த பின் வேறோரு தளத்துக்கு பரிணாமிக்க தொடங்கினார். அதன் விளைவாக பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய 3 படங்களை தொடர்ந்து 4வதாக “அசுரன்” உருவானது.
இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பவன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.
படத்தின் கதை
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு அசுரன் படம் எடுக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரின் சாதிய வன்மத்தை அசுரன் படம் பொட்டில் அடித்தாற்போல் பேசியிருந்தது.
வடக்கூரான் (ஆடுகளம் நரேன்) மற்றும் சிவசாமி (தனுஷ்) ஆகிய இருவருக்கும் ஏற்படும் நிலத்தகராறு பிரச்சினையில் சிவசாமியின் மூத்த மகன் (டீஜே அருணாச்சலம்) கொல்லப்படுகிறார். அண்ணனின் கொலைக்கு பழிதீர்க்க எண்ணும் இளைய மகன் (கென் கருணாஸ்) வடக்கூரானை கொல்கிறார். இதனால் ஆத்திரமடையும் வடக்கூரான் குடும்பம் சிவசாமி குடும்பத்தை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறது. இதனிடையே மனைவி பச்சையம்மாள் (மஞ்சு வாரியர்) மற்றும் மகளை , மைத்துனர் (பசுபதி) வசம் ஒப்படைத்து விட்டு மகனை காப்பாற்ற காட்டுக்குள் தஞ்சம் புகுகிறார். ஆனால் அங்கேயும் பிரச்சினை வர சாதுவான சிவசாமி குடும்பத்தினரை காப்பாற்ற என்ன செய்தார் என்பதே இப்படத்தின் கதை. வெக்கை நாவலை முதல் பாதியாகவும், தனக்கே உரித்தான திரைக்கதையை இரண்டாம் பாதியாகவும் கொண்டு அழகான படத்தை கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.
பாராட்டுகளைப் பெற்ற கிளைமேக்ஸ்
60 மற்றும் 80களில் நடக்கும் படத்தின் கதை அந்த கால காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து காட்டியது. குறிப்பாக பிளாஸ்பேக் காட்சியில் ஊருக்குள் செருப்பு அணிந்து சென்றதால் அவமானப்படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட பெண்ணான அம்மு அபிராமிக்கு நேரும் பிரச்சினை, தட்டிக் கேட்டதால் ஆதிக்க வர்த்தக்கத்தினர் செய்யும் அராஜகம் என அனைத்தையும் பக்காவாக கதையோடு பொருத்தியிருந்தார் வெற்றிமாறன். அவருக்கு பக்கப்பலமாக வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உதவியிருந்தது.
அசுரன் படத்தின் கிளைமேக்ஸ் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. வழக்கமான கமர்ஷியல் படங்களில் பழிக்கு பழி...ரத்தத்துக்கு ரத்தம் என்ற ரீதியில் தான் கதை அணுகப்பட்டிருக்கும். ஆனால் அசுரனில் கொலை செய்த கென் கருணாஸுடம், “நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க.. பணம் இருந்த பிடுங்கிடுவாங்க..ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது. நல்ல படிச்சி உயர்ந்த இடத்துக்கு வா. ஆனால் அங்க வந்து இவங்க நமக்கு செஞ்ச மாதிரி செய்து விடக்கூடாது” என தனுஷ் அட்வைஸ் செய்யும் அந்த ஒரு காட்சி மொத்த படத்திற்கான மணிமகுடம்.
இந்த படம் பல விருதுகளை அள்ளிய நிலையில் சிறந்த நடிகர் தனுஷ் மற்றும் சிறந்த படம் அசுரன் ஆகிய தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Irugapatru Review: “திருமணமானவர்கள்.. காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்” .. இறுகப்பற்று படத்தின் முழு விமர்சனம் இதோ..!