கொலை மிரட்டல் எதிரொலி… இந்தியாவில் வெளியிடப்படாத புல்லட்-ப்ரூஃப் கார் வாங்கிய சல்மான் கான்!
இந்தியாவில் இந்த கார் இதுவரை விற்பனை செய்யப்படாததால், சல்மான் கான் சர்வதேச சந்தையில் இருந்து நிசான் பேட்ரோ எஸ்யூவியை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நடிகர் சல்மான் கானுக்கு கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி, இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத புதிய புல்லட்-ப்ரூஃப் (குண்டு துளைக்காத) நிசான் பேட்ரோல் எஸ்யூவியை வாங்கியுள்ளார்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த வாரம் மும்பையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உள்ளூர் காவல்துறையின் பாதுகாப்புடன் தனது புதிய குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதை பலர் கண்டுள்ளனர். ஒரு வாரம் முன், சல்மான் கானின் 'இ-மெயிலுக்கு' வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, மும்பை மற்றும் லுனி போலீசார் இணைந்து விசாரித்து, ஜோத்பூர் மாவட்டம், லுனியைச் சேர்ந்த தக்காட் ராம் என்பவரை கைது செய்திருந்தனர். ஆனாலும் அவரது பாதுகாப்பு கருதி, தற்போது இந்த புல்லட் ப்ரூஃப் காரை வாங்கியிருப்பதாக தெரிகிறது. நிசான் பேட்ரோல் என்பது நிசான் இதுவரை தயாரித்ததில் மிகவும் விலையுயர்ந்த SUV ஆகும், மேலும் இது தென்கிழக்கு ஆசிய சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் வெளியிடப்படாத கார்
இந்தியாவில் இந்த கார் இதுவரை விற்பனை செய்யப்படாததால், சல்மான் கான் சர்வதேச சந்தையில் இருந்து நிசான் பேட்ரோலை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த SUV கார் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும், இது புல்லட்-ப்ரூஃப் வாகனங்களில் மிகவும் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. சல்மான் கான் தனது புதிய புல்லட்-ப்ரூஃப் நிசான் பேட்ரோல் எஸ்யூவியில் பயணிக்கும் வீடியோ பல யூடியூப் சேனல்களால் பகிரப்பட்டுள்ளது.
புல்லட் ப்ரூஃப் டெக்னாலஜி
அவரது எஸ்யூவி காரை உன்னிப்பாக கவனித்தால், ஜன்னல்களைச் சுற்றி அடர்த்தியான பார்டர் இருப்பதை காணலாம். இதுவே கார் புல்லட்-ப்ரூஃப் என்பதை வெளிப்படுத்துகிறது. வழக்கமான கார்களில் காணப்படுவதை விட தடிமனான கண்ணாடியுடன், அதன் மேல் இன்னும் தடிமனான ஷீட் ஒட்டப்பட்ட ஜன்னல்களை காண முடிகிறது. சல்மான் கானின் புதிய வாகனம் 405hp மற்றும் 560Nm டார்க் ஆற்றலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. 5.6 லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கானின் மற்ற கார்கள்
சல்மான் கானின் கார்களில் இது மட்டும் குண்டு துளைக்காத கார் அல்ல, அவர் சமீபத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியையும் வாங்கியிருந்தார், அதுவும் புல்லட் ப்ரூஃப் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சல்மான் கானுக்கு சொந்தமான Toyota Land Cruiser SUV லேட்டஸ்ட் மாடல் கார் அல்ல. ஏனென்றால் டொயோட்டா தற்போது புல்லட்-ப்ரூஃப் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதில்லை. இந்த குண்டு துளைக்காத SUVகள் தவிர, சல்மான் கானிடம் Mercedes Benz S-Class, Lexus LX 470, Audi A8, Porsche Cayenne, Range Rover Autobiography, Audi RS7, Mercedes AMG GLE 63 S மற்றும் Mercedes Benz GL-Class ஆகியவையும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.