Bhanuka Rajapaksa Injury: முழங்கையிலே ஓங்கி அடித்த தவான்..! 1 ரன்னில் பெவிலியனுக்கு நடையை கட்டிய பனுகா ராஜபக்சே..!
ஷிகர்தவான் விளாசிய பந்து பனுகா ராஜபக்சே முழங்கையை தாக்கியதால் அவர் 1 ரன்னில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தவான் விளாசல்:
ராஜஸ்தான் அணி பலமிகுந்த அணி என்பதால் ஆட்டத்தை தொடங்கியது முதல் பஞ்சாப் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் அதிரடி காட்டினார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 60 ரன்களை எடுத்தார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு அதிரடி வீரர் பனுகா ராஜபக்சே களமிறங்கினார். ராஜபக்சே 1 ரன்னுடன் ஆடிக்கொண்டிருந்தபோது ராஜஸ்தான் வீரர் வீசிய பந்தில் ஷிகர்தவான் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஷிகர்தவான் பவுண்டரிக்கு விளாசிய பந்து எதிர்முனையில் நின்று கொண்டிருந்த ராஜபக்சவின் முழங்கையில் பலமாக தாக்கியது.
ரிட்டையர்ட் ஹர்ட்:
இதில் ராஜபக்சேவிற்கு பலத்த அடிபட்டது. வலியில் துடித்த அவர் நிலைகுலைந்து மைதானத்தில் விழுந்தார். இதையடுத்து, அவரது காயத்தை பஞ்சாப் அணியின் மருத்துவ நிபுணர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேட் செய்வது அவரது காயத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் அவர் பேட்டிங் செய்வது நல்லது அல்ல என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி ராஜபக்சே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகினார்.
ராஜபக்சே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகினாலும் அடுத்துவந்த ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இருப்பினும் ராஜபக்சே ஆடாதது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஓவருக்கு 10 ரன்களை சராசரியாக பஞ்சாப் வைத்திருந்தாலும் பனுகா போன்ற வீரர்கள் சரமாரியாக சிக்ஸர்களை விளாசும் ஆற்றல் கொண்டவர்.
அவரது காயத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையிலே இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று தெரியவரும்.
மேலும் படிக்க: RR vs PBKS, IPL 2023 LIVE: விக்கெட் எடுக்க திணறும் ராஜஸ்தான்.. மைதானம் முழுவதும் பவுண்டரிகளை விரட்டும் பஞ்சாப்..!
மேலும் படிக்க: First Female Umpire: ஆண்கள் கிரிக்கெட்டில் முதன்முறையாக களமிறங்கிய பெண் அம்பயர்..! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..!