Pavni - Amir: "நாங்கள் சேர பிரியங்காதான் காரணம்.." பாவ்னியுடன் திருமணம் எப்போது? - அமீர் சொன்ன பதில்
நான் பிரியங்காவை ஒரு ரசிகனாக தான் ரசித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் அறிமுகம் இருந்தாலும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கள் உறவு என்பது வேறு தளத்திற்கு சென்றுள்ளது.
தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவ்னி. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனிடையே அவரது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நுழைந்த நடன இயக்குநர் அமீர் பாவ்னியை காதலிப்பதாக தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவ்னிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
அந்நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்து பல்வேறு இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொண்டனர். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர்- பாவ்னி ஜோடி கலந்துகொண்டு வெற்றி பெற்றது. இது முடிந்ததும் அமீர் காதலை ஏற்றுக் கொள்வதாக பாவ்னி அறிவித்தார். ஆனால் இருவரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தனது கலைப்பயணத்தில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நடந்த நேர்காணலில் சிறப்பு அழைப்பாளராக அமீர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நான் பிரியங்காவை ஒரு ரசிகனாக தான் ரசித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் அறிமுகம் இருந்தாலும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கள் உறவு என்பது வேறு தளத்திற்கு சென்றுள்ளது. மற்றவர்கள் பிரியங்காவுடன் பேசுவதை பார்த்து கோபப்பட்டுள்ளேன். பிரியங்கா என்றால் ஒரு பிராண்ட். அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலாக இருக்கிறார் என தெரிவித்தார்.
அப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அமீர்- பாவ்னி இருவருமிடையே திருமணம் நடந்தது போன்ற போன்ற புகைப்படம் காட்டப்பட்டது. அதுகுறித்து பேசிய பிரியங்கா, ‘என்னிடம் அக்கா நீதான் அந்த தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என ரிகர்சல் அப்ப சொன்னார்கள். அப்போது எதுவும் தெரியவில்லை. ஸ்டேஜில் பெர்பார்மன்ஸ் பண்ணும்போது ஒரு மாதிரி ஃபீல் ஆகிவிட்டது. கடந்த வாரம் படம் பார்க்க சென்றிருந்தபோது கூட இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி எப்படா கல்யாணம் என கேட்டேன்’ என கூறினார்.
இதற்கு பதிலளித்த அமீர், ‘ரீலில் வந்த மாதிரியே ரியலிலும் பிரியங்கா தான் தாலி எடுத்துக் கொடுப்பார். அவர் தான் என்கூட இருக்கணும். நான் பாவ்னிக்கு ப்ரோபோஸ் பண்ணேன்.ஆனால் அவள் என்னுடன் இருக்க காரணம் பிரியங்கா தான். இவர் இல்லை என்றால் அவள் என்னுடன் இருந்திருக்க மாட்டார். எங்கள் கல்யாணம் இந்த வருடத்தில் நடந்து விடும்" என அமீர் தெரிவித்துள்ளார்.