‛சத்தியமா அது நான் இல்லை... நான் அவன் இல்லை...’
‛உங்களை போன்ற மீடியாக்கள் தான் மீண்டும் எங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்’ என்று ராமன் சொல்கிறார்.
சாலை ஓர கையேந்தி பவனில் டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கும் இவரை பார்த்தவர்கள் வடிவேலுடன் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பவர்... பாவம் கொரனாவால் சினிமா வாய்ப்பு இல்லாமல் போனதால் இப்படி பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிடுகிறார் என்று நினைத்து செல்வார்கள்.....
வடிவேலுடன் கலக்கிய அந்த காமெடி நடிகரின் பெயர் லட்சுமணன். " மா.... மாயண்ணே வந்திருக்காக, மாப்ள மொக்கசாமி வந்திருக்காக, மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக...வாம்மா மின்னல்..." என்று யாருமே மறக்க முடியாத மாயி பட வசனத்தை பேசியவர். சேவல் படத்தில் போஸ்ட் மேன் வடிவேலு கொடுத்த லட்டரை லட்சுமணன் படிக்க சொல்வார். அதில்" படித்து முடித்தவன் கிழித்து விடவும்" என்று மட்டுமே எழுதப்பட்டு இருக்கும். இதனால் லட்டரை வடிவேலு கிழித்து போடுவார். உடனே லட்சுமணன்
"லட்டரை கிழிச்சிட்டீல... அப்ப படிச்சதை சொல்லிட்டு போ" என்று அடம் பிடித்து நமது வயிற்றை பதம் பார்த்தவர்.
ஒரு நாள் காலையில் நான் அலுவலகம் சென்ற போது மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள பிளாட்பாரம் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தவரை பார்த்து பேசினேன். இவரது பெயர் ராமன். நடிகர் லட்சுமணனுடன் உடன் பிறந்த அண்ணன். அதுவும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள். 'A.ராமன் வழங்கும் வெள்ளை ரோஜா' என்ற இசைக்குழுவை வைத்துள்ளார். 24 வருடத்துக்கு முன்பு நான் மாலை மலரில் பணிபுரிந்த போது 'கலை மலர்' பகுதிக்காக பேட்டி எடுத்து பிரசுரித்துள்ளேன். அவர் என்னை மறந்திருந்தாலும் இதை நினைவு படுத்தியதும் தெரிந்து கொண்டார்.
நாடக கலை போல் மேடை இசைகலையும் நலிவடைந்து போய் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் தெருவுக்கு தெரு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழ் நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் இன்னிசை குழுக்கள் இருக்கின்றன. கோவையில் சேரன் போக்குவரத்து கழக இன்னிசை குழு, மல்லிச்சேரி ( பீடி கம்பெனி) போன்ற இன்னிசை குழுக்களுக்கென்று தனி புகழ் இருந்தது. மதுரையிலும் ஏராளமான இசைக்குழுக்கள் இருந்தன. இப்போது சென்னை லட்சுமன் சுருதி, திண்டுக்கல் அங்கிங்கு போன்ற இசை குழுவினர் சினிமா பாடகர், பாடகிகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதால் ஓரளவுக்கு நிலைத்து நிற்கிறார்கள். டி.வி. ஷோக்களிலும் பங்கேற்கிறார்கள்.
இசை குழுவில் இருப்பவர்கள் பலர் வேறு இடங்களில் பணி புரிந்து இரவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சிலருக்கு இது தான் பிழைப்பு என்பார்கள். நலிந்து போன குழுக்களில் இருந்த இவர்களது நிலை இப்போது என்ன என்று தெரியவில்லை.
" உங்களை போன்ற மீடியாக்கள் தான் மீண்டும் எங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்" என்று ராமன் சொல்கிறார்.
அப்படி மீடியாக்கள் கொண்டு வந்தாலும் ரசிகர்களின் மனநிலை மாற வேண்டுமே. அவர்கள்தான் ஆட்டின் தலையை வெட்டி தங்களது நடிக தலைவர்களின் கட் அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் செய்கிறார்களே....!
-மதுரை மூத்த செய்தியாளர் தன்ராஜ்.