Comedian Bala : மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா.. பாராட்டும் ரசிகர்கள்
காமெடியன் பாலா ஈரோடு மாவட்டத்தை சுற்றி உள்ள 18 மலை கிராமங்களுக்கு மருத்துவ அவசரத்திற்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.
சின்னத்திரையில் தனது தனித்துவ காமெடியாலும், இன்ஸ்டண்ட் கவுண்டராலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் பாலா. கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. வெட்டுக்கிளி பாலா என செல்லமாக அழைக்கப்படும் பாலா ஒரு காமெடியனாக அறியப்பட்டாலும் அவரின் இன்னொரு முகம் மிகவும் அழகானது பெருந்தன்மையானது.
பாலாவின் உதவிக்கரம் :
கலை துறை மீது இருந்த தீராத காதலால் பள்ளிப்படிப்பை முடித்ததுமே கலைப்பயணத்தை நோக்கி பயணித்த பாலா பல போட்டிகளுக்கு நடுவே தனது தனித்துவத்தால் வெற்றி பெற்று வளர்ந்து வரும் ஒரு கலைஞராக இருக்கிறார். தான் வாங்கும் சம்பளம் சிறிய தொகை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லுள்ளம் கொண்டவர். ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது மட்டுமல்லாமல், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை தடையின்றி செய்து வருகிறார்.
ஆம்புலன்ஸ் சேவை:
அந்த வகையில் அடுத்த கட்டமாக மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. ஈரோடு மாவட்டம் கடம்பூரை சுற்றிலும் சுமார் 18 மலை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பாம்புக்கடி, பிரசவம் அல்லது வேறேதும் அவசர சிகிச்சை தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதிய வசதி இல்லாமல் அவதி படுகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக மருத்துவ அவசர உதவி காலங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்க திட்டமிடப்பட்டது. அதை தனது சொந்த பணத்திலேயே வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் பாலா. அதன் தொடக்க விழா இன்று ஈரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடங்கப்ட்ட சேவை :
உணர்வுகள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மக்கள் ராஜன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா பேசுகையில் " மலை வாசிகளின் மருத்துவ ரீதியிலான அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்த வரையில் மக்களுக்கு சேவை செய்வேன். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்கிறேன். முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்" என்றார்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட மற்றவர்களுக்கு உதவ மனமில்லாமல் இருக்கும் போது தான் சம்பாதிக்கும் கொஞ்ச பணத்தை கூட ஆதரவற்றவர்களுக்கு மக்களுக்கும் சேவை செய்வது பாராட்டிற்குரியது என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.