Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Clever trailer launch: இரண்டு நாய்களை மட்டுமே வைத்து புதிய முயற்சியாக 'கிளவர்' என்ற படம் உருவாகியுள்ளது. அதன் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.
காலம் காலமாக திரைப்படங்களில் விலங்குகளை நடிக்க வைப்பது என்பது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பாம்பு, நாய், குரங்கு, மாடு, யானை போன்ற விலங்குகளை பிரதானமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளன. அப்படி படம் எடுத்தவர்களில் முதன்மையானவர்கள் சாண்டோ சின்னப்பத்தேவர் மற்றும் இராமநாராயணன்.
படங்களில் விலங்குகளுக்கு முக்கியத்துவம்:
நடிகர்களுடன் இணைந்து இந்த விலங்குகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும். அப்படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அவர்களுக்கு பிறகு அப்படி பட்ட படங்கள் வெளியாவதன் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் ஒரு இடைவேளைக்கு பிறகு இரண்டு நாய்களை மட்டுமே வைத்து ஒரு முழு நீள படம் ஒன்று வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ளது. கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் இப்படத்தை தயாரிக்க படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன். இப்படத்திற்கு 'கிளவர்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் தொடக்கம் முதல் இருந்து வரையில் இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தை சுற்றியும் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுள்ளது. வாசு இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள முத்து முனியசாமி படத்தொகுப்பு பணிகளையும், தீபக் கார்த்திகேயன் மற்றும் சஞ்சய் கார்த்திகேயன் இணை தயாரிப்பாளர்களாக படத்தின் பணிகளை கவனித்துள்ளனர். ரகுநாத் இசையமைத்துள்ளார்.
ட்ரெயிலர் ரிலீஸ்:
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றதில் தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் 'கிளவர்' படத்தின் இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன் பேசுகையில் உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு நாய்களை மட்டுமே வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மா நாயிடம் இருந்து குட்டியை சைக்கோ ஒருவர் திருடி செல்ல அவனிடமிருந்து எப்படி அம்மா நாய்க்குட்டி குழந்தையை காப்பாற்றி மீட்டது என்பதை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
மிகவும் விறுவிறுப்பாக, த்ரில்லிங் கலந்து திகிலாக இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நாய்களை தவிர வேறு யாரும் இப்படத்தில் நடிக்கவில்லை. இந்த புதிய முயற்சி நிச்சயம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவரும். கமர்ஷியல் படமாக இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை நிச்சயம் அனைவரும் வரவேற்பார்கள். கோடை விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 'கிளவர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த புது முயற்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பார்க்கலாம். இந்த கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஏராளமான திரைப்படங்கள் வெளியாக தயாராக இருக்கின்றன.