Kavignar Vaali: மூக்கு முட்ட குடித்து விட்டு வாலி எழுதிய சூப்பர்ஹிட் பாட்டு!
ஒரு நாள் மாலை நான் மது அருந்த ஆரம்பித்தேன். அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து புரொடக்ஷன்ஸ் மேனேஜர் ஓடி வந்தான் என வாலி நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

வாலிபக் கவிஞர் என அழைக்கப்படும் மறைந்த பாடலாசிரியர் ஒரு நேர்காணலில் தான் போதையில் இருக்கும்போது பாடல் ஒன்றை எழுதினேன் என சொல்லி சம்பவம் ஒன்றை நினைவுக் கூர்ந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
அந்த நேர்காணலில் பேசிய வாலி, “வீட்டுக்கு வந்து நான் பேச்சுலர். சாயங்காலம் ஆச்சுன்னா குடிப்பேன். அப்படித்தான் ஒரு நாள் மாலை நான் மது அருந்த ஆரம்பித்தேன். அப்போது ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து புரொடக்ஷன்ஸ் மேனேஜர் ஓடி வந்தான். சார் நாளைக்கு காலையில பாட்டு ரெக்கார்டிங் இருக்கு. மதியம் ஷூட்டிங் போக வேண்டி இருக்கு. அந்த படம் கருப்பு - வெள்ளையில் வெளியான சர்வர் சுந்தரம் படமாகும்.
அந்த படத்தில் நீங்க பாட்டு எழுத வேண்டும். கிருஷ்ணன் பஞ்சு உள்ளிட்ட எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என கூறி எம்.எஸ்.விஸ்வநாதனின் மேனேஜர் தாடி சுந்தரம் சொன்னார். அப்போது நான் நிதானத்தில் கூட இல்லை. நான் தாடி சுந்தரத்திடம் உட்காருடா என சொல்லி மது அருந்த சொன்னேன். மணி போய்கிட்டே இருக்கு. என்னடா வாலியை தேடி போனவனை ஆளைக் காணோம். குகைக்குள்ள போன கதையா இருக்கே என சொல்லி கோவர்தனன் என உதவி இசையமைப்பாளர் இருந்தார். அவர் என்னைத் தேடி வந்தார்.
என்ன அண்ணே இப்படி உட்கார்ந்து இருக்கீங்க, உங்களுக்காக ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என கூறினார். நான் அவரிடம், சாயங்காலம் எனக்கு கண்ணதாசனுடன் தானே நிகழ்ச்சி என எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னானே என கேட்கிறேன். இல்லை தெய்வத்தாய் படம் பார்த்து சர்வர் சுந்தரம் படத்தில் வரும் ஒரு பாட்டை வாலி எழுதலாம் என மெய்யப்ப செட்டியார் விரும்புகிறார் என கூறினார்.
உடனடியாக நான் குளித்து முடித்து விட்டு அங்கு சென்று அரைமணி நேரத்தில் பாட்டு எழுதி விட்டேன். அந்த ரூமில் இருந்த செட்டியார் பாட்டை கேட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு என சொன்னார். அப்படியே இந்த ரூமுக்குள் ஏதோ வாசனை அடிக்குதே, ஊதுபத்தியை ஏற்றி வைங்கப்பா என சொன்னார். அப்படி நான் எழுதிய பாட்டு தான் “அவளுக்கென அழகிய முகம்” பாடல்” என தெரிவித்திருப்பார்.
கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் 1964ம் ஆண்டு வெளியான படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், ரங்கா ராவ், எஸ்.என்.லட்சுமி என பலரும் நடித்திருந்தனர். ஏவிஎம் தயாரித்த இப்படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். கண்ணதாசன், வாலி ஆகிய இருவரும் இப்படத்திற்கு பாடல்களை எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















