(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay Speech : ”அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்; குணத்தை விட்றாதீங்க” - மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்...!
அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள் என்று நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்பட்டது. சென்னை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
மாணவர்களுக்கு விஜய் அறிவுரை
"வருங்கால இந்தியாவின் எதிர்கால சக்திகளாகிய மாணவர்களை காண்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழச்சியில் படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் கேட்டேன்.
’காடு இருந்தால் பிடிங்கி கொள்வார்கள் , காசு இருந்தால் எடுத்து கொள்வார்கள் ஆனால் படிப்பு மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது' அது மிக பாதித்த வரிகளாக இருந்தது இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இது தான் எதார்த்தமும் கூட என்று நடிகர் தனுஷ் படமான அசுரன் பட வசனத்தை சொன்னார்.
”குணத்தை இழக்கக் கூடாது"
"எனக்கு பிடிச்ச விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சா எடுத்துக்கோங்க இல்லனா விட்ருங்க. பள்ளியில் படிப்பது அவசியம் தான். அதைவிட நமது கேரக்டரும் சிந்திக்கும் திறனும் மிக மிக முக்கியம். குணத்தை இழந்து விட்டால் நாம் எல்லாத்தையும் இழந்து விடுவோம். நம்ம வாழ்க்கை நம்ம கையில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரியில் கற்றத்தைத் தவிர்த்த மற்றவையே கல்வி என்றார் ஜன்ஸ்டீன். படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் என்று ஐன்ஸ்டீன் சொல்லிருந்தார்.
அதேபோல், நற்குணத்தை இழந்து விட்டால் எல்லாவற்றையும் இழந்ததாக பொருள். பணத்தை இழக்கலாம்; குணத்தை இழக்கக் கூடாது.’when Wealth Is Lost; Nothing Is lost; When Health Is Lost; Somenthing Is Lost; When Character Is Lost; Everything Is Lost’. இது ஏன் சொல்றேன் என்றால் மாணவர்கள் பெற்றோர்களிடம் தள்ளி இருந்து விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதனால் எங்கு இருந்தாலும், கல்வியை தாண்டி நம்முடைய குணத்தை ஒருபோதும் இழக்கக் கூடாது என்பது தான்” என்றார்.
"படிப்பை தாண்டி சிந்தனை திறன் தேவை”
தொடர்ந்து பேசிய அவர், ”கல்விதான் யாராலும் அழிக்க முடியாத செல்வம். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள். சோசியல் மீடியாவில் வரும் அனைத்து செய்திகளையும் நம்பாதீர்கள். எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது நாம் சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இதற்கு தான் படிப்பை தாண்டி சிந்தனை திறன் தேவை" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் நடிகர் விஜய்.