(Source: ECI/ABP News/ABP Majha)
Bussy Anand: விஜய்யிடம் உதவிக்கேட்டு வந்த வயது முதிர்ந்த தம்பதி... புஸ்ஸி ஆனந்த் செய்த அடடே செயல்...!
விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு உதவி கேட்டு வந்த வயதான தம்பதிக்கு தளபதி வந்தவுடன் அரிசி உள்ளிட்டவைகளை வாங்க உதவி செய்வதாக உறுதி அளித்த புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு ரூ.2000 கொடுத்தனுப்பினார்.
இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில். புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு பறிமாறிக்கொண்டிருந்த போது ஒரு வயதான தம்பதி அங்கு வந்தனர். அப்போது புஸ்ஸி ஆன்ந்த் அவர்களிடம் தாங்கள் எதற்காக வந்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் தங்களுக்கு எந்த வருமானமும் இல்லாததால் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.
உடனடியாக தனது பாக்கெட்டில் இருந்து ரூ. 2000 பணத்தை எடுத்து அத்தம்பதிகளிடம் கொடுக்கிறார். பின் புஸ்ஸி ஆனந்த், தளபதி ஊரில் இல்லை என்றும் உங்கள் முகவரியை உங்கள் மாவட்ட தலைவரிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள். தளபதி வந்ததும் உங்களுக்கு மாதம் மாதம் அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்து தருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் அந்த வயதான தம்பதிக்கு உறுதி அளித்தார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பிற்பகல் 1 வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் இருந்து தொகுதி வாரியாக ஐ.டி விங் நபர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொகுதிக்கு 3 பேர் ஐடி விங் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, சமூக ஊடகங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்சப், போன்றவைகளில் மக்கள் இயக்க நடவடிக்கைகளை எப்படி பதிவு செய்ய வேண்டும். எந்தெந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் போன்றவை குறித்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐடி விங் மட்டுமின்றி பிற அணி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், ”தமிழகம் அளவில் பல அணிகளுடன் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளது. நம் இயக்கம் அடுத்து வேறு ஒரு பரிமாணம் எடுக்கவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அமல்படுத்தி வருகிறது. மக்கள் இயக்கத்தின் அணிகளை வலுப்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவுகளை போடக்கூடாது.
நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இயக்கத் தலைமை வெளியிடும் பதிவின் லைக் மற்றும் ஷேரின் எண்ணிக்கை மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல், மற்றவர்களின் பதிவுகளை லைக், ஷேர் செய்யக் கூடாது. மொழி, இனம், சாதி மத வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும்” இவ்வாறு கூறினார்.
இந்த கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் செல்போன் வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செல்போனை வெளியில் வைத்துவிட்டு வந்த பிறகே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று ஐ.டி. விங் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.