Blacksheep Deva celebration Event : ஏழாயிரம் ரசிகர்கள்.. தெறிக்கவிட்ட ரஜினிகாந்த் என்ட்ரி.. பிரமாண்டமாக நடந்த தேவா இசை கச்சேரி!
ஏழாயிரம் ரசிகர்கள் முன்னிலையில், தனது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடிய தேனிசை தென்றல் தேவா
இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்களின் 30 ஆண்டு கலைப்பயணத்தை கொண்டாடும் வகையில் “BLACKSHEEP'S தேவா THE தேவா” எனும் பிரம்மாண்டமான இசைக்கொண்டாட்டத்தை நவம்பர் 20ஆம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிளாக் ஷிப் நிறுவனம் நிகழ்த்தியது.
இந்நிகழ்ச்சியில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" அவர்கள் நேரில் கலந்து கொண்டு தேவா அவர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வின் போது மேடையிலேயே கேக் வெட்டி, அதை சூப்பர் ஸ்டாரும் தேவாவும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் தேவாவின் புகழ்பெற்ற சலோமியா பாடலுக்கு அப்பாடலில் நடித்த நடிகர் பிரசாந்த் நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தியதோடு, தேவா இசையமைத்து சூப்பர் ஹிட் திரைப்படமான காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்த தேவயானி அத்திரைப்படத்தில் வருவது போல், தேவா அவர்களை பாராட்டும் வகையில் கடிதம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தும், நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த பாணியில் மேடையில் தேவா அவர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டும் இசையமைப்பாளர் அனிருத் ரசிகராக மாறி தேவா அவர்கள் இசையமைத்த பாடல் ஒன்றை பாடியும் தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெய், பாண்டியராஜன், பாக்கியராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் நடிகைகள் மீனா, தேவயானி, மாளவிகா மற்றும் இவர்களுடன் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, வசந்த், மோகன் ராஜா, சித்ரா லட்சுமணன் என திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேவா அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்களான கானா மற்றும் மெலடி பாடல்களை புகழ்பெற்ற பாடகர்கள் சித்ரா, ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன், எஸ்.பி.சரண், திப்பு, ஹரிணி, ஸ்ரீகாந்த் தேவா, அல்கா ஆஜித், பிரியங்கா, சபேஷ் முரளி, என பல இசைக் கலைஞர்கள் பாடியும் இசையமைத்தும் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ப்ளாக் ஷீப்பினை சேர்ந்த RJ விக்னேஷ்காந்த் மற்றும் சுட்டி அரவிந்த் அவர்கள் தொகுத்து வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இந்த இசை நிகழ்ச்சியை பிளாக் ஷிப் நிறுவனம் அரங்கேற்றியது.