நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவைர தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது ரத்த மாதிரி சோதனையில் போதை பொருள் உட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ள நிலையில், போதை பொருள் விவகாரத்தில் விஐபி நடிகர்களும் சிக்குவார்கள் என சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் போதை பொருள்
போதை பொருள் சம்பவம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிஸ்மி, சினிமாவில் முன்பை விட தற்போது போதை கலாச்சாரம் அதிகரித்து சீரழிந்து கிடக்கிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மளையாள சினிமாக்களை காட்டிலும், பாலிவுட்டில் தான் போதை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு ஒரு முடிவு இல்லாத தொடர்கதையாக நீள்கிறது. இதை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக அவர்களது பெயரை சொல்ல முடியாது. ஆனால், நாம் பார்த்து வியந்து போன நடிகர்கள் பலர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் கூறுவதை ஏற்க முடியாது
நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தில் மன அழுத்தம், குடும்ப பிரச்னையால் போதை பொருளை பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார். நான் விசாரித்த வரையில் ஸ்ரீகாந்த் மென்மையான மனிதர். அவர் நல்லவராகத்தான் இருந்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறையவும், குடும்பத்தில் பிரச்னை இதனை சமாளிக்க முடியாமல் போதை பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், இங்கு யாருக்குத்தான் பிரச்னை இல்லை. நாள்தோறும் பல பிரச்னைகளோடுதான் மனிதர்கள் போராடுகிறார்கள். அவர்கள் நினைத்தால் கெட்ட வழிக்கு செல்லலாம். மன அழுத்தத்தால் போதை எடுத்துக்கொண்டேன் என்பதை ஏற்க முடியாது. அது சரியான வழியும் இல்லை என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
விஐபி நடிகர்கள், நடிகைகள்
ஒரு நடிகரின் படத்தின் வெற்றி விழா அல்லது பிறந்தநாள் பார்ட்டியில் இதுபோன்ற போதை பொருள் கிடைக்கும். ஆனால், இப்போது விலை உயர்ந்த போதை வஸ்தான கொக்கைன் போன்ற பொருட்களையும் நடிகர்கள் பயன்படுத்துவதாக எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறேன் என பிஸ்மி கூறியுள்ளார். மேலும், அதிமுகவை சேர்ந்த பிரகாஷ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அவர் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் இதுவும் அம்பலமாகியிருக்கிறது. இல்லையென்றால் அப்படி ஒரு விஷயமே நடந்தது போன்ற சுவடே இல்லாமல் போயிருக்கும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நேர்மையாக விசாரிப்பது நல்லது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போதை பொருள் விவகாரத்தில் இன்னும் பல விஐபி நடிகர்கள், நடிகைகளும் சிக்குவார்கள் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் பழிவாங்கல் என்றே கூற முடியும்.





















