Ponnambalam: மருத்துவமனையில் அட்மிட் ஆன பொன்னம்பலம்.. மனம் உருகி வெளியிட்ட ஆடியோ
நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உருக்கமாக பேசி வெளியிட்ட ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். அதைத்தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் வர தொடங்கினார். முதல் முறையாக நடிகர் விஜயகாந்த் தான் இவரை தனி ஃபைட்டராக மாற்றினார். சத்ரியன் படத்தின் மூலம் விஜயகாந்துடன் சோலோ ஃபைட்டராக உருவெடுத்தார். இதைத்தொடர்ந்து செந்தூரபாண்டி, நாட்டாமை போன்ற படங்களில் வில்லனாக நடித்து தனக்கென்ற தனி அடையாளத்தை பதித்தார்.
நாட்டாமை பொன்னம்பலம்
பல படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும், நாட்டாமை படத்தில் அவரது கெட்டப்பும், பொன்னம்பலம் என்ற பெயரும் தனித்துவம் வாய்ந்தது. குறிப்பாக நாட்டாமை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மனோரமாவை பார்த்து டாய் கிழவி அதிகம் பேசாத மூச்சு வாங்கும் என்ற வசனம் இன்றைக்கும் ரசிகர்களை கவர்ந்த வசனமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வில்லனாக மிரட்டி வந்த பொன்னம்பலத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவ செலவிற்கே தனது கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது என தெரிவித்தார்.
பொன்னம்பலம் வேதனை
ஸ்டண்ட் ஊழியராக இருந்து கஸ்டப்பட்டு ஒரு உயரத்தை அடைந்திருக்கிறேன். எனக்கு 2 கிட்னியும் பெயிலர் ஆகிவிட்டது. எனது அக்கா மகன் தான் எனக்கு கிட்னி தானம் செய்தான். ஆனால், ஸ்டண்ட் யூனியனில் இருந்து எனக்கு உதவி செய்ய ஒருத்தர் கூட வரவில்லை என்பது மன வேதனையாக இருந்தது. நான் பல பேருக்கு உதவி செய்திருக்கிறேன். சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால், நமக்கு இப்படி ஒரு நிலையா என நினைத்து வேதனைப்பட்டேன். ஆனால், அந்த நேரத்தில நடிகர் தனுஷ், சரத்குமார் எனக்கு பண உதவி செய்ததை மறக்கமாட்டேன் என தெரிவித்தார். மேலும், நடிகர் சிரஞ்சீவி மிகப்பெரிய உதவி செய்தார் எனக் கூறினார். மேலும், அண்ணன் விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக என்னை இந்த அளவிற்கு தவிக்க விட்டிருக்கமாட்டார் என பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஆசன வாய் ஆபரேஷன்
உடல்நலக்குறைவால் படங்களில் நடிக்காமல் இருந்த பாென்னம்பலம் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பொன்னம்பலம் பேசி வெளியிட்டிருக்கும் அந்த ஆடியோவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே நான் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். ஆசன வாய் அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. எமர்ஜென்சி வார்டில் இருந்து நார்மல் வார்டுக்கு மாறிவிட்டேன். இன்னும் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்றும் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
உதவி செய்த நடிகர்கள்
பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு பொன்னம்பலம் மாறியுள்ளார். இந்நிலையில், தனக்கு உதவி செய்த சிரஞ்சீவி, கமல், ரவி மோகன், தனுஷ், சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசியுள்ளார். மேலும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.





















