Actor Krishna: போதைப்பொருள் வழக்கு; நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி - வீட்டிலும் சோதனை
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீசார், காலையில் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் நேற்று நடிகர் கிருஷ்ணாவை கைது செய்த போலீசார், அவரிடம் விடிய விடிய விசாரணை நத்திய நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலையில் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணை
திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரரான நடிகர் கிருஷ்ணாவிற்கு, போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். ஆனால், கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. அவரது எண்ணுக்கு தொடர்புக்கொண்ட போது அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், தலைமறைவானதாக கருதிய போலீசார், அவரை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தனர்.
இதையடுத்து கிருஷ்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று மாலை அவரே போலீசார் முன் ஆஜராகியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனை
அதைத் தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகு, போலீசார் அவரிடம் விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணவின் வாக்குமூலம்
இந்த விசாரணையின்போது, தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ள கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் தனது நெருங்கிய நண்பர் என்பதை மறுக்கவில்லை என தெரிகிறது.
கிருஷ்ணா, தனக்கு இரைப்பை அலர்ஜி உள்ளதாலும், இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதால், அதற்கான சிகிச்சையில் மேற்கொள்வதாலும், தன்னால் போதைப் பொருளை எடுத்துக்கொள்ள முடியாது என போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், பிரசாத்திடம் தான் போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் கூறியது உண்மை இல்லை என்றும், பிரதீப்புடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். அதோடு பெரிய ட்விஸ்டாக, நீங்கள் தேடும் கிருஷ்ணா நான் இல்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
வீட்டில் சோதனை
இதனிடையே, இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக வீட்டிலும், அவரது கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கிருஷ்ணா பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில், அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும், இந்த வழக்கில் இன்னும் யார் யார் சிக்குவார்கள் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.





















