HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்ற பாலுமகேந்திரா, ஏ.ஆர்.ரஹ்மானுக்காக தனது நண்பன் இளையராஜாவை விட்டுக்கொடுத்த சம்பவம் ஒரு முறை அரங்கேறியுள்ளது.
தமிழ் திரையுலகத்தை உலகளவில் திரும்பி பார்க்க வைத்த மாமேதைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவு, இயக்கம் என இரண்டிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் எடிட்டிங் என ஒவ்வொன்றிலும் பலருக்கும் முன்னோடியாக திகழ்பவர். 2014ம் ஆண்டு காலமான அவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் தேசிய விருது:
ஆஸ்கர் விருது வாங்கி ஒட்டுமொத்த நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் தேசிய விருது வாங்க காரணமாக இருந்ததே பாலுமகேந்திராதான் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
தமிழ் திரையுலகில் இசை என்றாலே இளையராஜாதான் என்று இருந்த காலகட்டத்தில் ஒரு சிறுவனாக உள்ளே வந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் இசையால் திருப்பிப்போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது முதல் படமான ரோஜா படம் பெற்ற இமாலய வெற்றி ஏ.ஆர்.ரஹ்மானை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
பாலுமகேந்திராவே காரணம்:
1992ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கும் குழுவின் நடுவராக பாலுமகேந்திரா இருந்தார். அப்போது, அந்த விருதுக்கான போட்டியில் இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் சம வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர். குழுவின் நடுவருக்கு மட்டும் 2 வாக்குகள் செலுத்தும் உரிமை இருந்தது.
அந்த அடிப்படையில், சிறந்த இசையமைப்பாளரை தேர்வு செய்வதற்கான தனது 2 வாக்குகளையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலுமகேந்திரா செலுத்தினார். பாலுமகேந்திரா இயக்கிய மற்றும் ஒளிப்பதிவு செய்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரான இளையராஜா, அவரது நெருங்கிய நண்பர்.
இளையராஜாவை விட்டுக்கொடுத்தது ஏன்?
ஆனாலும், நண்பனுக்கு தன்னுடைய வாக்கைச் செலுத்தாமல் அப்போதுதான் இசையமைப்பாளராக அறிமுகமான பாலுமகேந்திராவுக்கு வாக்களித்ததற்கு பாலுமகேந்திரா சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்தது. பாலுமகேந்திரா ”இரண்டுமே சிறந்த இசை. இளையராஜா ஏற்கனவே தனது இடத்தை உருவாக்கி விட்டார்.
அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர் கூட வாங்கலாம். ஆனால், முதல் படத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம் தனியானது அல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாக்களித்தேன்” என்று கூறினார். அன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்தது மட்டுமின்றி, அவர் கூறியது போலவே ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதையும் பெற்றுவிட்டார்.