"இந்தியாவுடனான தொடர்பே எனது சமையலில் பிரதிபலிக்கிறது" - ஆஸ்திரேலிய மாஸ்டர்செஃப் பிரபலம் நெகிழ்ச்சி
இந்தியாவுடனான எனது நெருக்கமான தொடர்பே எனது சமையலில் எதிரொலிக்கிறது என்று ஆஸ்திரேலிய மாஸ்டர்செஃப் பிரபலம் சாரா டூட் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வாறு உலகெங்கிலும் பல்வேறு மொழிகளிலும் பிரபலமாக உள்ளதோ, அதேபோல சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமாக உள்ளது. தமிழில் இந்த நிகழ்ச்சி பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும் உலகின் மற்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சிக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.
சென்னையில் மாஸ்டர்செஃப் பிரபலம்:
அந்த வகையில், அந்த நாட்டில் ஒளிபரப்பான மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சாரா டூட். சமையற்கலை நிபுணர், மாடல், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்தியா வந்திருந்த இவர் சென்னையில் சமையல் பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தினார்.
சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள பிரபல தனியார் வணிக வளாகமான பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இந்த சமையல் பயிற்சி வகுப்பை சாரா டூட் நடத்தினார். இரண்டு மணி நேரம் நடத்திய இந்த பயிற்சி வகுப்பில் அவர் இந்திய உணவுகள், பாஸ்தா உள்பட ஏராளமான உணவுகளை செய்து அசத்தினார்.
இந்தியாவுடன் நெருக்கம்:
அவரது இந்த பயிற்சி வகுப்பை சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் கண்டுகளித்தனர். சென்னையில் தான் நடத்திய இந்த சமையல் வகுப்பு குறித்து சாரா டூட் கூறியதாவது, என்னுடைய இந்த மாஸ்டர் வகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தியா மற்றும் ப்ரெஞ்ச் உணவுகளை சமைத்தேன். அதுவே அழகாக வெளிப்பட்டுள்ளது. எனக்கு இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. அதுவே எனது சமையலில் பிரதிபலித்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
2014ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியில் சாரா டூட் பங்கேற்றார். இவர் லண்டனில் சமையல் பயிற்சி பெற்றவர். மாஸ்டர்செஃப் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. தற்போது 36 வயதான சாரா டூட் 2015ம் ஆண்டு தன்னுடைய முதல் உணவகத்தை கோவாவில் திறந்தார். இந்தியாவில் இருந்து மட்டும் 50 ஆயிரம் நபர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
மேலும் படிக்க: SirTeaser: "சாமியை கொன்னுட்டேன்” - விமலின் மிரட்டலான நடிப்பில் வெளியானது சார் படத்தின் டீசர்!
மேலும் படிக்க: Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ