Arun Matheswaran: மக்களுக்கு கேஸ் விலை தெரிஞ்சா போதும், வசூல் நிலவரம் எதுக்கு.. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்டம்!
Arun Matheswaran: “மக்களுக்கு கேஸ் விலை ஏறுகிறதா இல்லை , பெட்ரோல் விலை ஏறுகிறதா என்பது தான் முக்கியமாக இருக்க வேண்டும்” என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள்
சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின் திரைத் துறையைப் பற்றிய அதிகப்படியான தகவல்கள் ரசிகர்களிடம் சென்று சேருகின்றன. ஒரு படம் நன்றாக இருக்கா, இல்லையா என்கிற அளவில் மட்டுமே ரசிகர்களின் பங்கீடு இருந்தது போக, தற்போது ஒரு படம் உலகம் உலகத்தின் கடைக்கோடி வரை எவ்வளவு வசூல் செய்திருக்கிறது வரையிலான தகவல்கள் மக்களை சென்று சேர்கின்றன. எந்த நடிகரின் படம் அதிகமாக வசூல் செய்கிறது என்பதை வைத்து ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். அதே நேரம் ஒரு படத்தின் தரம் அதன் கதை நன்றாக இருக்கிறதா என்கிற அடிப்படையில் இல்லாமல் அது பாக்ஸ் ஆஃபிஸில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதன் அடிப்படையில் வைத்து தீர்மானிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக திரைப்பட இயக்குநர்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஆனால் சமகாலத்தில் அங்கீகாரம் பெற்ற பல இயக்குநர்கள் திரைப்படங்களில் வசூலுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்கிற கருத்து பரவலாக இருந்து வருகிறது. ஒரு படம் அதில் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத அளவு இருந்தால் போதும் அதற்கு மேல் அது எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பது மக்களுக்கோ, இயக்குநர்களுக்கோ தேவையில்லாத ஒன்று என்பதே இவர்களின் ஒத்த கருத்தாக இருந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது:
அருண் மாதேஸ்வரன்
ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படி கூறியுள்ளார். “எனக்கு என்னுடைய படத்தை நானே தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஒரு 40 லட்சத்தில் என்னால் ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் . ஆனால் படத்தின் வசூலில் போட்டி ஏற்படும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் என்பது ஒரு கேம். அதற்குள் ஒரு கிரியேட்டர் போகவே கூடாது. ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது தயாரிப்பாளர்கள் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. மக்களுக்கு கேஸ் விலை ஏறுகிறதா இல்லை, பெட்ரோல் விலை ஏறுகிறதா என்பது தான் முக்கியமாக இருக்க வேண்டும். என் படம் பிடிக்கிறது என்றால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் திட்டுங்கள் அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது” என்று அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Napoleon: மகன் திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதல் பத்திரிகை வைத்த நடிகர் நெப்போலியன்!