ABP EXCLUSIVE: ‘கருப்பா இருக்கேன்னு நிராகரிச்சாங்க’.. சினிமா டூ சீரியல்..- ‘கார்த்திகை தீபம்’ ஹர்த்திகா சிறப்பு பேட்டி!
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கு ஜோடியாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தீபா. மாநிறம், சாதுவான குணம், நடுத்தர குடும்ப பெண்மணி என்ற கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்ட தீபாவின் நிஜப்பெயர் அர்த்திகா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘செம்பருத்தி’ சீரியல் ஹீரோ கார்த்திக்ராஜ். சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியல் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜூம், ஹீரோயினாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகாவும் நடிக்கிறார்.
கார்த்திகை தீபம் சீரியலின் கதாநாயகன் கார்த்திக்கை நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் யார் இந்த தீபா? புது முகமாக இருக்கிறாரே… என்ற கேள்வி நிச்சயம் அனைவருக்கும் எழுந்திருக்கும். கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவாக வரும் அந்த பெண் யார் தெரியுமா ?
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கு ஜோடியாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தீபா. மாநிறம், சாதுவான குணம், நடுத்தர குடும்ப பெண்மணி என்ற கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்ட தீபாவின் நிஜப்பெயர் ஹர்த்திகா.
View this post on Instagram
பார்ப்பதற்கு முழுக்க முழுக்க தமிழ் பெண் போல இருக்கும் ஹர்த்திகா (தீபா) கேரளாவைச் சேர்ந்தவர். கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் பிறந்து, வளர்ந்து, திரைத்துறையில் எந்த பின்னணியும் இல்லாமல் திரையுலகில் கால் பதித்தவர். மாடலிங் செய்து நடிகையான பலரில் இவர் அடங்கவில்லை. வாய்ப்புகள் தானாக தேடி வர, எதிர்பாராமல் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். நான்கு தமிழ் படங்கள், ஒரு மலையாள படம் என வரிசை கட்டி படங்கள் நடித்தும் சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கப்பெறவில்லை.
திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமல், சின்னத்திரையில் தற்போது களமிறங்கியுள்ளார் ஹர்த்திகா.
சினிமா டூ சீரியல் என்ன காரணம்?
வெள்ளித்திரையோ சின்னத்திரையோ எனது கதாபாத்திரமே எனக்கு மிக முக்கியமானது. நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் எதில் வேண்டுமானாலும் நடிக்கத் தயார். வெள்ளி திரையில் எனக்கு வாய்ப்புகள் சரியாக வரவில்லை. அதனால் என்னை நிரூபித்துக்கொள்ள நான் வாய்ப்புக்காக காத்திருந்த காலங்களில் ‘கார்த்திகை தீபம்’ என்ற நல்ல ஸ்கிரிப்ட் ஒன்று என்னை தேடி வந்தது. அதில் தற்போது என் முழு உழைப்பையும் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறேன். எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நல்ல திரைக்கதை என்னை தேடி வரும் எனக் காத்திருக்கிறேன்.
உங்களது பயணம் பற்றி சொல்லுங்கள்?
நான் ரொம்ப ஃபிட்டான பொண்ணெல்லாம் இல்ல…மாநிறம்; கொஞ்சம் குண்டு தான்! ஆரம்பத்தில் எனது உடல் குறித்தும் நிறம் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தது. அப்போது மிகவும் மனமுடைந்து போவேன். என் அம்மா தான் நான் ஒவ்வொரு முறை மனம் தளர்ந்து உட்காரும் போதும் எனக்கு நம்பிக்கை அளித்து, மீண்டும் என்னை என் பயணத்தை தொடங்க வைப்பார்.
தற்போது எனக்கு அந்த தாழ்வு மனப்பான்மை குறைந்து உடலமைப்பு, நிறத்தை தாண்டி, நமது நடிப்பில் தான் அனைத்தும் உள்ளது என்ற எண்ணம் வந்துவிட்டது. நிறம் என்பது வெள்ளை, கருப்பு அவ்வளவுதான்! ஆனால் நம் கதாபாத்திரம்; அவை ஏற்படுத்தும் தாக்கம் என்பது இன்னும் உயர்ந்தது என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு உறுதுணை என்றால், அது நடிகர் விக்ரமின் சேது படத்தின் நாயகி அபிதாவை சொல்லலாம். தற்போது மாரி சீரியலில் நடித்து வரும் அபிதா, எனக்கு ஒரு நல்ல நண்பராக மட்டுமில்லாமல் வழிகாட்டியாகவும் இருக்கிறார். என்னை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய பங்கு உண்டு.
தமிழ் திரையுலகில் நான் நுழைந்த பிறகு, மெல்ல மெல்ல தமிழ் பேச கற்றுக் கொண்டேன். மலையாளத்திற்கும் தமிழுக்கும் பெரிய வித்தியாசம் என்பது எதுவுமில்லை. சக நடிகர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் நடிக்கும் அனைவரும் பரிச்சயமான நடிகர்கள் மற்றும் பிரபல நடிகர்கள்.
அவர்கள் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். பெரிய ஆர்டிஸ்ட் என்ற ஏற்றத்தாழ்வு எதுவும் இன்றி என்னுடன் பழகுகிறார்கள். மேலும் கதாநாயகன் கார்த்திக் உடன் நான் ஏற்கனவே ஒரு தமிழ் திரைப்படம் நடித்தேன். பிளாக் அண்ட் ஒயிட் என்ற அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவருடன் ஏற்கனவே பழகியதால் இந்த சீரியலில் நடிக்க மிகவும் சவுகரியமாக இருக்கிறது.
சினிமாவில் உங்களது இன்ஸ்பிரேஷன் யார்?
எனக்கு இன்ஸ்பிரேஷன் என யாரும் இல்லை. எனக்கு பிறரைப் போல நடிப்பதில் ஆர்வம் இல்லை. எனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க நினைக்கிறேன். நடிப்பை பொருத்தவரை, நடிகர் விக்ரமின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நடிப்பிற்காக அவர் போடும் கடின உழைப்பு, அவரது அர்ப்பணிப்பை பார்த்து நான் வியந்து இருக்கிறேன்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எடுத்து நடிக்க தயார். குறிப்பாக பவர்ஃபுல்லான வுமன்சென்ட்ரிக் கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சாதுவான பெண்ணை விட, ஒரு போல்டான தைரியமான பெண் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்.
தமிழ் மலையாளம் இரண்டிலும் நடிக்க ஆர்வம் உள்ளது. தெலுங்கு கற்றுக்கொள்ள பலமுறை முயற்சி செய்தும் இன்னும் சரியாக வரவில்லை.
சினிமா பின்னணி இல்லாமல் இங்கு வர நினைப்பவர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?
உங்கள் கடின உழைப்பை கொடுத்துக் கொண்டே இருங்கள். முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நிச்சயமாக உங்களுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்று கூறி விடை பெற்றார் ஹர்த்திகா..