சினிமா வாய்ப்புக்காக தவறான பாதைக்கு அழைக்கிறார்கள் - ஆதாரத்துடன் பதிவு செய்த அனிதா சம்பத்!
திரைப்பட வாய்ப்புகளுக்காக பெண்களை தவறாக பயன்படுத்தும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அனிதா சம்பத் ஆதாரத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகும் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் இவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்தாண்டு பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது செயல்பாடு காரணமாக அவர் மீது கலவையான விமர்சனங்கள் எழுந்தது.
தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், அனிதாவின் தோழி ஒருவர் திரைப்பட வாய்ப்புகளுக்காக இளம்பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக அனிதா சம்பத்திடம் இன்ஸ்டாகிராமில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
தோழியுடனான தனது சாட்டிங்கை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார். மேலும், இதுபோன்று பட வாய்ப்புகள் தருகிறேன் என இளம் பெண்கள் பலரைம் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளனர். அனிதா சம்பத்தின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தித்துறையில் இருந்து சின்னத்திரையில் தற்போது அனிதா சம்பத் பரப்பாக இயங்கி வருகிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வௌியாகிய காப்பான் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் உடன் இணைந்து ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார்.
திரைப்பட துறைகளில் இதுபோன்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை தவறாக பயன்படுத்த முயற்சிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருப்பதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மி டூ இயக்கத்தின் கீழ் பல பெண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர்.
அப்போது, சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்த திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து உள்பட பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். மேலும், முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கான எதிரான பாலியல் தொல்லைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும், இதை தடுப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : பாலை நிலத்தை பூஞ்சோலையாக மாற்றிய ‛விவசாயி’ தேவயாணி... குவியும் பாராட்டுக்கள்!