தியேட்டரில் ரிலீசாக இருந்த சார்பட்டா படம்… செக் வைத்த அமேசான் ப்ரைம்
சார்பட்டா படத்தை திரையரங்கில் பார்த்தால் அருமையாக இருந்திருக்குமே என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழு திரையரங்கத்தில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியது
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விமர்சன ரீதியாக தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. தமிழ் பிரபா, பா.ரஞ்சித் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளன.
குறிப்பாக ரங்கன் வாத்தியாராக வரும் நடிகர் பசுபதி, டான்சிங் ரோசாக வரும் சபீர், கெவின் டாடியாக வரும் ஜான் விஜய், வெற்றிச்செல்வனாக வரும் கலையரசன், ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமா குமார், வேம்புலியாக வரும் ஜான் கொக்கென் உள்ளிட்டோரது நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் அறிமுக நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார். 1970களில் சென்னையில் குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் போட்டியையும், அதன் பின்னால் உள்ள கட்சி, சாதிய அரசியலையும் மையப்படுத்திய இப்படத்தின் மூலம் எமர்ஜென்சி கால சென்னைக்கே நம்மை டைம் டிராவல் செய்ய வைத்து இருப்பார் பா.ரஞ்சித்.
திமுக, அதிமுக அரசியல், எமர்ஜென்சி, மிசா கைது என அனைத்தையும் பட்டவர்த்தனமாக பேசி இருக்கும் பா.ரஞ்சித், சார்ப்பட்டா பரம்பரையில் இருந்த சிலரிடம் உள்ள சாதிய பாகுபாடுகளையும் பேசத் தவறவில்லை. பூர்வகுடி சென்னை மக்களின் வாழ்வியலை அழகாக மக்களிடம் கடத்தி இருக்கும் சார்பட்டா பரம்பரை மற்ற பாக்சிங் படங்களில் இருந்தும் வேறுபட்டு உண்மையின் பிரதிபலிப்பாக இருந்ததே அதன் பெரும் வெற்றிக்கு காரணம்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய, காலா, கபாலி படங்கள் பெரும் வெற்றியை பெறாத நிலையில், சார்பட்டா திரைப்படத்தில் தனது வழக்கமான பாணிக்கு திரும்பி மிரட்டலான வெற்றியை பதிவு செய்துள்ளார். இவ்வளவு அருமையான படத்தை திரையரங்கில் பார்த்தால் நல்ல அனுபவமாக இருந்திருக்குமே என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை பார்க்க முடிந்தது. கொரோனா ஊரடங்கால் சூரரைப் போற்று, சார்பட்டா போன்ற தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்புகள் ஓ.டி.டி.யின் பக்கம் கரை ஒதுங்கி உள்ளது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பதால் சார்பட்டா படம் திரையரங்கில் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே சார்பட்டா படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த கலைஞர் டிவி திரையரங்க உரிமைத்தையும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சார்பட்டா படக்குழு திரையரங்கத்தில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியதாம்.
ஆனால், இதனை மோப்பம் பிடித்த அமேசான் பிரைம் நிறுவனம், ஒப்பந்தப்படி திரையரங்கில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று படக்குழுவிடம் எச்சரித்ததால் இந்த முடிவை கைவிட்டதாகவும், இறுதியில் கலைஞர் டிவியிடம் சாட்டிலைட் உரிமத்தை மட்டும் படக்குழு விற்பனை செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள், புதிய படங்கள் இல்லாத காரணத்தால் காற்றுவாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் சார்பட்டா போன்றதொரு வெற்றிப்படம் வெளியானால் ரசிகர்களை தியேட்டர் பக்கம் மீண்டும் வரவழைக்கலாம். ஆனால் முடிவு அமேசான் ப்ரைம் கையில்.