Ajith Fan Dead : துணிவு படம் பார்க்கப்போன இளைஞர், லாரி மீது நடனமாடியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு..
சென்னையில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த விபத்தில் ரசிகர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “துணிவு”. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
துணிவு படம் பொங்கல் வெளியீடாக இன்று தியேட்டரில் ரிலீசாகியது. அதேசமயம் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் இன்று வெளியானதால் சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் நேற்று மாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். கடந்த ஒரு வார காலமாகவே டிக்கெட் வாங்கவும், பேனர்கள் வைக்கவும் ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்ததால் தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டன.
View this post on Instagram
மேலும் கவுண்டர்களில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் வெளிசந்தையில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என விற்கப்பட்டது. முதல் காட்சிக்காக டிஜே, செண்டை மேளம் என தியேட்டர் வளாகம் களைக்கட்டியது. இதற்கிடையில் சென்னையில் பிரபலமான ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் கிழித்தெறிந்தனர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவம் மறைவதற்குள் ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் ஆர்வ மிகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது ஏறி ஆடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழ, முதுகுத்தண்டில் அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.