Vanitha Vijayakumar: “பிக்பாஸ் என்றாலே பிரச்சினை தான்” - இமெயில் பட விழாவில் நடிகை வனிதா பரபரப்பு பேச்சு
‘இ-மெயில்’ படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் முருகா படத்தில் நடித்த அசோக் குமார் ஹீரோவாகவும், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மக்களும் குறைந்த பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் என தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் முருகா படத்தில் நடித்த அசோக் குமார் ஹீரோவாகவும், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜூபின் பின்னணி இசையமைத்துள்ளார். ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் இந்த படமானது எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அமீர் வெளியிட்டிருந்தார்.
ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ள இ-மெயில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “ரொம்ப நாள் கழிச்சி உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். இ-மெயில் தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டைட்டில். எல்லாருக்கும் இ-மெயில் என்றால் என்பது தெரியும். ஒரு படத்துக்கு கவர்ச்சிகரமான டைட்டில் என்பது முக்கியமானது. டைட்டிலை பார்க்கும்போது கண்டிப்பாக வலுவான கதை இருக்கு என்பது தெரிகிறது.
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் தயாரான இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார். கேம் என்றாலே பிரச்சினை தான். அது பிக்பாஸ் ஆக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும் நமது மனம் ஈர்க்கப்படும். நாம் என்னதான் கேமுக்குள் சென்றாலும், நம் எண்ணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அது இந்த காலத்து குழந்தைகளிடம் குறைவாக உள்ளது. பிறந்த குழந்தை கையில் கூட போன், ஐபேட் எல்லாம் கொடுக்கிறார்கள். அதற்கு எல்லாம் தெரியாது என நினைக்கிறோம். ஆனால் அத்தனையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய குட்டி பொண்ணு கூட இப்படித்தான் இருந்தாள். அவள் 2, 3 வயதாக இருக்கும்போது ஐபோனை எடுத்து அதில் ஏதோ பில் போட்டுவிட்டாள். மாதா, மாதம் ரூ.99 மட்டும் ரீசார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். என்னடா இது என பார்த்தால் ஏதோ ஒரு கேமுக்கு கட்டணம் போய்க்கொண்டே இருந்தது. குழந்தைகள் ரொம்ப திறமையானவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கக்கூடாது. அவர்களுக்கு என்ன வேண்டும், வேண்டாம், நல்லது கெட்டது எல்லாம் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த மாதிரி தான் இந்த இ-இமெயில் படம் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டின் ஏதோ விபரீதத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. குறிப்பாக பெண்கள் ஆக்ஷன் பண்ணியிருப்பது ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு படம் எடுத்து இந்த ஸ்டேஜ் வரை வருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களும் குறைந்த பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க முயற்சி எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
வனிதா பிக்பாஸ் கேம் ஷோ என்றாலே பிரச்சினை என பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா 3 மற்றும் ஓடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவரது மூத்த மகள் ஜோவிகாவும் நடப்பு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.