Swara Bhaskar : அரசியல் பேசியதால் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.. தனுஷ் பட நடிகை ஒப்பன் டாக்
தன் அரசியலை வெளிப்படையாக பேசுவதன் காரணத்தினால் தனக்கு திரைப்பட வாய்ப்புகளே வருவதில்லை என நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்வரா பாஸ்கர்
பாலிவுட்டில் பல துணை கதபாத்திரங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றவர் ஸ்வரா பாஸ்கர். இந்தியில் தனுஷ் நடித்து 2011-ஆம் ஆண்டு வெளியான அம்பிகாபதி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பாலிவுட் சினிமா, அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருபவர் ஸ்வரா பாஸ்கர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் படம் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறையை ஆதரிக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை கடிதமாக எழுதியிருந்தார்.
ஸ்வராவின் கணவரான ஃபகத் அகமத் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணி பிரெஸிடெண்டாக உள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளால் தனக்கு படங்களில் நடிக்கவே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஸ்வரா பாஸ்கர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஆசைப்பட்டுதான் நடிக்க வந்தேன்
"நான் நடிப்பை ரொம்பவும் நேசித்து தான் சினிமாவிற்குள் வந்தேன். நிறைய விதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் , நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் நான் சர்ச்சைக்குரிய நடிகையாகிவிட்டேன். லேபிள் செய்து உங்களைப் பற்றி புரளி பேசுவார்கள்" என்று அவர் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்ள விரும்பவில்லை
தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோது, உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"போரில் குண்டடி படுவதற்கு நான் தயாராக தைரியமாக நிற்பது போல் தோன்றலாம். ஆனால் குண்டு படும்போது வலிக்கும் என்பது தான் உண்மை. நான் எடுத்த முடிவுகளுக்கான பின்விளைவுகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் என்னை பாதிக்கப்படவராக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இது நானே எடுத்த முடிவுதான். என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று நான் தான் முடிவு செய்தேன். பத்மாவத் படத்தின் மேல் என்னுடைய விமர்சனங்களை சொல்லாமல் நான் அமைதியாக இருந்திருக்கலாம்.
ஆனால் நான் அந்த படத்தை விமர்சித்து கடிதம் எழுத முடிவெடுத்தேன். இது நானே தெளிவாக தேர்தெடுத்த ஒரு பாதைதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.