’எனக்கு இந்த நோய் இருக்கு, வெளியே சொல்ல வெட்கம் இல்ல’ - நவரசா நாயகி பளீச்..!
நவரசா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரக்யா மார்ட்டின், தனக்கு இருக்கும் நோய் குறித்து முதல்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்தவர் பிரக்யா மார்ட்டின். இவர் தமிழில் பிசாசு படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், எளிதாக ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் சமீபத்தில் வெளியான, நவரசா படத்தில் இடம்பெற்றுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று என்ற படத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். சூர்யா- கெளதம் மேனன் கூட்டணி என்றால் என்ன சொல்லவா வேண்டும், காதலை மையப்படுத்தித்தான் இப்படமும் வெளியானது.
இந்நிலையில் முதல் முறையாக சூர்யாவுடன் நடித்திருந்த அனுபவம் குறித்து பிரக்யா சமீபத்தில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "இந்த படம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சொல்ல வார்த்தையே வரவில்லை. சூர்யா திரையுலகில் பெரிய ஸ்டார். அவர் தனது நடிப்பு மூலம் பார்வையாளர்களுக்குத் தன்னை யார் என்பதை ஒரு ஒரு படம் மூலமும் நிரூபித்து வருகிறார். நான், ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல், ஒரு பார்வையாளராகவும், சூர்யாவிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன். அதேபோல் இயக்குநர் கெளதம் மேனனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும். சூர்யாவுடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. வேலையில் அவ்வளவு கண்ணியத்துடன் செயல்படுவார். அவருடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் எதிர்மறையாக வரும் விமர்சனங்களை எப்படிக் கையாளுவீர்கள், அதனால் மனவலி ஏற்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரக்யா, “திரைத்துறையில் உடல் அமைப்பு குறித்து நிறைய கேலி கிண்டல்கள் வரும். அதனால் மனநிம்மதி கடுமையாக பாதிக்கப்படும். என்னிடம் பலரும் உடல் எடையைக் குறைக்குமாறு பலரும் அறிவுறுத்துவார்கள். மேலும் உடல் எடையை குறைத்தால் நான் அழகாக இருப்பேன் என கூறினார்கள். அவர்கள் சொல்வது ஒரு வகையில் எனக்கு சரியானதும், நல்லதும் கூட. நான் அதை மறுக்கவே இல்லை. ஆனால் எனக்கு பிசிஓடி இருப்பதால் உடல் எடையைக்குறைப்பது மிகவும் கடினம்.
இது பலருக்குத் தெரியாது. எனக்கு இந்த நோய் இருப்பதைச் சொல்வதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடல் எடையைக் குறைக்க எவ்வளவு முயற்சி செய்த பிறகும், என்னால் இதனால் குறைக்க முடியவில்லை. மக்கள் ஒரு நடிகர், நடிகையை மனிதனாகப் பார்க்க ஆரம்பித்தால் நிறைய மாற்றங்கள் உண்டாகும். திரையில் நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரத்தையும், அவர்களது உண்மையான குணத்தையும் மக்கள் குழப்பிக் கொள்கின்றனர். படம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் ” எனக் கூறியுள்ளார்.