’தூக்கில் தொங்கியபடி இருந்தார்; என் அம்மாவுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது...’ - கோரிக்கை வைத்த கல்யாணி!
தன் அம்மா தற்கொலை செய்தது குறித்தும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடிகை கல்யாணி தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் ’அண்ணாமலை’, ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’உள்ளிட்ட தொடர்களிலும், அதன் பின் வெள்ளித் திரையில் அள்ளித் தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும் 90ஸ் கிட்ஸ்களிடம் பிரபலமானவர் நடிகை கல்யாணி.
நடிகை டூ பிரபல தொகுப்பாளினி...
பின்னர் சில ஆண்டுகளில் வளர்ந்ததும் இவர் ’பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10 வரை’, ’மறந்தேன் மன்னித்தேன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வெள்ளித்திரையில் இருந்து விலகி மீண்டும் சின்னத்திரையில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். பிரபல தொகுப்பாளினி பாவனாவுடன் இவர் இணைந்து நடத்திய ’பீச் கேர்ள்ஸ்’ என்ற கலந்துரையாடல் தொடர், 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் நடித்தார். பின்னர் ரோஹித் எனும் மருத்துவரை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து திருமணத்துக்குப் பின் அவர் மீண்டும் ரீ என்ட்ரீ கொடுத்துள்ள நிலையில், சின்னத்திரையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அம்மா குறித்து உருக்கமான பதிவு...
இந்நிலையில், தன் அம்மா தற்கொலை செய்து கொண்டது குறித்து தன் இன்ஸ்டாகிராமில் கல்யாணி பகிர்ந்துள்ள பதிவு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில், ”24 டிசம்பர் 2014. நான் இரண்டு ஆத்மாக்களை அன்று இழந்தேன். சாதாரணமாக ஆரம்பித்த அந்த நாள் என் வாழ்வின் மிகக் கொடூரமான நாளாக மாறியது. என் அம்மாவும் நானும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். அன்று நான் வழக்கப்படி என் அம்மாவுடன் ஜிம்முக்கு செல்லத் தயாராகி வந்து அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.
அவர் கதவைத் திறந்தபோது உற்சாகமாக இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும் இருந்தார். தொடர்ந்து அவருக்கு கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டு தயாராக சொல்லி விட்டு வெளியே சென்றேன்.
பின் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து வாசலில் மணியை பல முறை அடித்தேன் ஆனால், கதவு திறக்கப்படவில்லை. எனக்கு பதற்றம் அதிகமானதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினேன். அப்போது, என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
View this post on Instagram
மீட்டெடுத்த கணவர்...
அம்மா தற்கொலை செய்துகொண்ட போது எனக்கு வயது 23 தான். அன்று முதல் என் வாழ்க்கை அடியோடுமாறிவிட்டது. என் அம்மா என் சிறந்த தோழி, அவர் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
என் அம்மா நீண்ட நாள்கள் கவலையில் இருந்ததை நான் அவரது டைரியில் படித்து பின்னர் தான் தெரிந்து கொண்டேன். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் பின்னர் என் கணவரை சந்தித்தேன். அவரே எனக்கு பெரும் உதவி செய்து, மன உளைச்சலில் இருந்த என்னை மீட்டெடுத்தார்.
நமக்கு உதவ உலகில் பலரும் தயாராக உள்ளனர். ஆனால் நாம் அழைக்கும் உதவி எண்கள் பலவும் செயலற்றே உள்ளன. நான் அதை மாற்ற விரும்புகிறேன். தங்களுக்கு உதவி கிடைக்காத நிலையில் எவரும் தன் அன்னையை இதுபோல் இழக்கக் கூடாது.
தற்கொலை தடுப்பு உதவி எண்
இச்சூழலில், தேசிய தற்கொலை தடுப்பு உதவி வழங்கும் கிரண் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கான வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், மக்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு 24x7 டெலி கவுன்சிலிங் வழங்கும்படி இந்தியாவின் அனைத்து ஓடிடி தளங்களிலும் இந்த எண் பகிரப்பட வேண்டும்.
அத்தளங்களில் நிகழ்ச்சி தொடங்கும்போதும், முடியும்போதும் இந்த எண்களை பார்வையாளர்களுடன் பகிர்வது பெருமளவு உதவி செய்யும், வேண்டியவர்களை சென்றடையும்” எனத் தெரிவித்துள்ளார்.
கல்யாணியின் இந்த நெடிய பதிவுக்கு அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு அவரை வாழ்த்தியும் வரும் வருகின்றனர்.