Chinmayi : MeToo விவகாரத்திற்கு பின் பாடகி சின்மயி நிலை என்ன? ... நேர்காணலில் அவரே சொன்ன தகவல்..!
நான் பக்கா தமிழ்நாட்டு பொண்ணு.ராமநாதபுரம் தான் என் சொந்த ஊர், நான் தெலுங்கர் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என சின்மயி கூறியுள்ளார்.
மீ டூ விவகாரத்திற்கு பின் தன்னுடைய நிலைமை என்ன பிரபல பாடகி சின்மயி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
புயலை கிளப்பிய மீடூ விவகாரம்:
கடந்த 2018 ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். இந்த MeeToo புகார் திரைத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளானது. இதனைத் தொடர்ந்து வைரமுத்துவிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் முற்றிலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொடர்பான புகார்களை MeeToo விவாகரத்தில் தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.அதேசமயம் தொடர்ந்து வைரமுத்து குறித்து ஒவ்வொரு நேர்காணல்களிலும் சின்மயி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் அறிவித்த போது சிலர் வைரமுத்துவோடு ஒப்பிட்டு பேசினர். அதற்கு பதிலடி கொடுத்த சின்மயி, வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும். அப்ப புரியுமோ என்னவோ என கடுமையாக சாடியிருந்தார்.
மீ டூ புகார் காரணமாக சரியாக சந்தா கட்டவில்லை என்று சின்மயியை டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி நீக்கினார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய சின்மயி, தான் நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை வாங்கினார். இந்நிலையில் இந்த சம்பவங்களுக்குப் பின் தன்னுடைய நிலைமை என்ன என்பதை சின்மயி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நான் பக்கா தமிழ்ப்பொண்ணு:
அதில் நான் பக்கா தமிழ்நாட்டு பொண்ணு.ராமநாதபுரம் தான் என் சொந்த ஊர், நான் தெலுங்கர் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழச்சியாக இருப்பதால் தான் இவ்வளவு தைரியசாலியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் வைரமுத்து விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த பிறகே நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். அவரை நான் வல்லவர், நல்லவர், பெரிய மனுஷர் என பேசிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
ஜெயலலிதா போன்ற பலமான பெண் அரசியல் ஆளுமைகள் இருந்திருந்தால் இது வேறுமாதிரி இருந்திருக்கும். நிறைய பேர் என்னிடம் அவர் இருக்கும்போதே இப்பிரச்சனையை சொல்லிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள். நானும் யோசித்திருக்கிறேன். காரணம் சம்பந்தப்பட்ட நபர்களை அரசியல் கட்சியை சார்ந்து தானே பார்க்கிறார்கள்.
எனக்கு நடந்தது உண்மைன்னு எனக்கு தெரியும். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இப்பிரச்சனையில் சமாதானம் பேச ஒரு பெரிய இயக்குநர் போனில் பேசியது என அனைத்தும் தன்னிடம் உள்ளது. நான் நினைச்சா எல்லாரையும் நாறடிக்கலாம். ஆனால் அதெல்லாம் தேவையில்லை என இருக்கிறேன். என்னை ஒருவேளை கொலை செய்தால் இந்த ஆதாரங்களை எல்லாம் ஒரு 4 பேரிடம் கொடுத்து வைத்துள்ளேன். அவர்களை ரிலீஸ் பண்ண சொல்லிருக்கேன்.
தமிழில் பாட, டப்பிங் பேச வாய்ப்பு குறைவாக வருகிறது என்றும், தெலுங்கில் டப்பிங், பாடல் என பல விஷயங்கள் செய்கிறேன். தமிழில் விதிக்கப்பட்டுள்ள தடையை தாண்டியும் இசையமைப்பாளர்கள் கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, அஸ்வின் விநாயக மூர்த்தி, ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் பாட அழைக்கிறார். டப்பிங் பொறுத்தவரை மித்ரன் போன்றோர் முன்வந்து பணியாற்ற சொல்கின்றனர் என சின்மயி தெரிவித்துள்ளார். என்னிடம் டப்பிங்கில் என்னை பணிசெய்ய தடைவிதிக்க கூடாது என இடைக்கால தடை உள்ளது. ஆனால் ராதாரவி இந்திய சட்டத்தைப் பின்பற்றாமல் தனி சட்டத்தைப் பின்பற்றுகிறார் போல என சின்மயி அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.