கல்யாணம்னா பயம்; என்னை போன்றோரை பிச்சைக்காரர்களைப் போல் பார்க்கின்றனர்: நடிகை பென்ஸி
குண்டாக இருப்பவர்களை பிச்சைக்காரர்களைப் போல் பார்க்கின்றனர் என நடிகை பென்ஸி கூறியிருக்கிறார்.
குண்டாக இருப்பவர்களை பிச்சைக்காரர்களைப் போல் பார்க்கின்றனர் என நடிகை பென்ஸி கூறியிருக்கிறார். நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் பென்ஸி. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். அதில் திருமுருகன் சித்தப்பா மகளாக காமு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.
இந்நிலையில் தனது திரைப்பயணம், திருமண வாழ்க்கைப் பற்றி அவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனமாடுவது ரொம்ப பிடிக்கும். பரதநாட்டியம், குச்சிப்புடி எல்லாம் முறையாக கற்றுக் கொண்டேன். என்னோட அப்பாவு இந்தியன் வங்கியில் மேலாளராக இருந்தார். அம்மா ஹோம் மேக்கர். அப்பாவுக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்கணும் என்ற ஆசை. அவர் இந்தியன் பேங்க் மேனேஜர் ஆக இருந்தாலும் கூட ஆடிசனுகளுக்காக பல இடங்களுக்கு போவார். அப்படிப் போகும்போது ஒரு முறை என்னையும் அவர் அழைத்துக் கொண்டு போனார். அங்கே என்னைப் பார்த்துவிட்டு ஒருத்தர் குழந்தையாக சீரியலில் நடிக்க பொருத்தமாக இருப்பேன் என்று சொன்னார். அப்ப நான் 6 ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நபர் அப்படிச் சொல்லியதால் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆறாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு செய்தேன். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் கலந்துகொண்டு செலக்டட் ஆனேன். எனக்கு கிளாசிகல் மட்டும்தான் தெரியும். வெஸ்டர்ன் தெரியாது. அது ஒரு ட்ராபேக்காக இருந்தது.
இருந்தாலும் நான் என்னுடைய முயற்சிகளைக் கைவிடவில்லை. தொலைக்காட்சியில் ஆங்கரக பயணத்தை தொடங்கி அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டேன்.
பிஇ முடித்தேன். அதன்பின்னர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒருநாள் பேப்பரில் நாதஸ்வரம் என்ற சீரியலில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்தது. அப்போதுதான் திருமுருகன் சாரை மீட் பண்ணினேன். அதற்கு பிறகுதான் நாதஸ்வரம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் நடிக்கும்போதே எனக்குத் திருமணமும் நடைபெற்றது. என்னுடைய திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
ஆனால் நான் நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்திருந்தாலும் கூட என் திருமணம் ஸ்வரமாக இனிக்கவில்லை. என் வாழ்க்கையில் எனக்கு விவாகரத்து ஆகும் என்று கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை. கல்யாண வாழ்க்கையில் நல்லா இல்லையென்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். விவாகரத்து ஆனதும் கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனால், என் குடும்பமும் என்னை புரிந்து கொண்டார்கள். அந்த வேளையில் தான் கல்யாண விடு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படியே நான் என்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டு வந்தேன்.
திருமுருகன் சார் முதல் ஒட்டு மொத்த டீமும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கும் சாகுற வரைக்கும் நடிக்கணும் என்ற ஆசை. சீக்கிரமே திருமுருகன் சாருடைய புராஜெக்ட் மூலமாக எல்லோரையும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்கவே எனக்கு பயமாக இருக்கிறது.
குண்டாக இருந்தால் இந்த சமுதாயத்தில் மரியாதையே இல்லை. என்னைப் போன்றோரை பிச்சைக்காரர்களைப் பார்ப்பது போல் ஏளனமாகப் பார்க்கிறார்கள்.