Ashika Ashokan: பேருந்தில் அத்துமீறிய நபர்.. நள்ளிரவில் இளம் நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..
பேருந்தில் நான் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது இரவு நேரத்தில் ஏதோ ஒன்று என் மீது பட்டதை உணர்ந்தேன். பின்னர் தான் அது பின்னால் பயணித்தவரின் கை என புரிந்தது.

தன்னுடைய பருவ வயதில் பேருந்தில் நடந்த மிகக் கொடுமையான பாலியல் சீண்டலை நடிகை ஆஷிகா அசோகன் வேதனையுடன் ஏபிபி நாடு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி படம்
சந்தோஷ் ரயான் இயக்கத்தில் சாண்ட்ரா அனில், ஆஷிகா அசோகன், ஐஸ்வர்யா, ரேகா, ஹரீஷ் பேரடி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை ஆஷிகா அசோகன் ஏபிபி நாடு சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக வயது வித்யாசமாக இல்லாமல் அரங்கேறி வருகிறது. அதனை பலபேர் வெளியில் சொல்வதில்லை. அப்படியான ஏதாவது கசப்பான சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளதா? என கேள்வி கேட்கப்பட்டது.
பேருந்தில் நடந்த கொடூர சம்பவம்
அதற்கு பதிலளித்த நடிகை ஆஷிகா, “நான் 12ம் வகுப்பு படித்து விட்டு எனது பட்டப்படிப்புக்காக பெங்களூவில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இருந்தேன். அட்மிஷன் போடுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன். அதேசமயம் கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பித்திருந்தேன். அங்கு தான் பட்டப்படிப்பு படித்தேன்.
எனினும் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து எனக்கு ஒருநாள் போன் வந்தது. அதாவது நாளைக்கு நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நான், அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் அங்கு சென்று விட்டு கோயம்புத்தூருக்கு கர்நாடகா மாநில அரசு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தோம். உடனடியாக அழைத்ததால் எங்களால் வேறு போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை. பெங்களூரு - கோயம்புத்தூர் பயணத்தில் வழியில் ஒரு காட்டு வழி பாதையைக் கடந்து தான் வர முடியும். அதிகாலையில் தான் கோயம்புத்தூருக்கு அந்த பேருந்து வரும்.
இப்படியான நிலையில் அப்போது எனக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். நான் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தேன். அடுத்ததாக தம்பி அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தான். அதன்பிறகு அப்பா இருந்தார். இரவு பயணத்தில் பேருந்தின் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது.
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். அப்போது ஒரு நேரத்தில் என் மீது ஏதோ பட்டது போல உணர்ந்தேன். முதலில் நான் அதனை இலை என நினைத்து தட்டி விட்டு தூக்கத்தை தொடர்ந்தேன். ஆனால் அதன்பிறகு ஏதோ ஒரு கைது என் மீது பட்டதை உணர்ந்த அதிர்ச்சி, பயம் என்னால் இன்று வரை கூட மறக்க முடியவில்லை.
இரண்டு முறை நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். மூன்றாவது முறை அப்படி கை பட்டதும் அம்மாவிடம் சொல்ல அவர் அப்பாவிடம் சொன்னார். என் அப்பா அந்த நபரை முகத்திலேயே குத்தினார். அந்த நபரை தூக்கி வெளியே இழுத்துப் போட்டார். ஆனால் அந்த பேருந்தில் இருந்த யாரும் எதுவும் செய்யவில்லை. அந்த நபரின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.





















