Yogi Babu: திரும்ப திரும்ப சொல்றேன்... நான் ஹீரோ இல்லைங்க.. 4 காட்சிகளால் கதறும் யோகி பாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, விரைவில் வெளியாக உள்ள தாதா திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடிக்கவில்லை என மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி கலைஞர்களுக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. பெரிய ஹீரோக்கள் நடித்த கதையே இல்லாத படங்களும் கூட, அதில் இடம்பெற்று இருந்த நகைச்சுவை காட்சிகளுக்காக வெற்றி படமாக மாறிய வரலாறு உண்டு. கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஜொலித்தவர்கள் வடிவேலு மற்றும் விவேக். ஆனால், வடிவேலு சில வருடங்கள் படங்களில் ஒப்பந்தமாகமல் இருந்தது, விவேக் அதிகளவில் படங்களில் நடிக்காமல் இருந்தது மற்றும் அந்த வரிசையில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தது போன்ற காரணங்களால், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
யோகி பாபுவின் வளர்ச்சி:
அந்த சூழலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான மான் கராத்தே திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலாமானார். அதைதொடர்ந்து அவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற, அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமானார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த யோகி பாபு, ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கோடம்பாக்கத்தின் பிசியான காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார்.
நாயகனான யோகி பாபு:
ரசிகர்கள் அளித்த ஆதரவால் கூர்கா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் யோகி பாபு நடித்துள்ளார். கடந்தாண்டு யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு, தேசிய விருதையும் வென்றது.
தாதா திரைப்பட பிரச்னை:
இந்த சூழலில், நிதின் சத்யா ஹீரோவாக நடித்து வரும் தாதா படத்தில், யோகி பாபு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த படத்தின் விளம்பரங்களில் நிதின் சத்யா புகைப்படங்கள் பயன்படுத்தப்படாமல், யோகி பாபுவை ஹீரோ போன்று முன்னிலைப்படுத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த யோகி பாபு, தாதா திரைப்படத்தில் நிதின் சத்யா தான் ஹீரோ, நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். எனவே தயவுசெய்து விளம்பரத்திற்காக இதுபோல் செய்யாதீர்கள் என, கடந்த ஜுலை மாதமே டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
மீண்டும் சீண்டும் தாதா படக்குழு:
இந்நிலையில் தான், தாதா திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், அந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இன்று (நவ.28) வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. யோகிபாபுவின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் புது போஸ்டரிலும், யோகி பாபுவே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
Iam not hero intha padathla Nithin Sathya hero aver frinda Nan paniiriukan Nan hero illa makkla nambathinga pic.twitter.com/763PslR9Mu
— Yogi Babu (@iYogiBabu) November 28, 2022
யோகி பாபு விளக்கம்:
தாதா படக்குழுவின் அறிவிப்பு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அப்படத்தில் நான் ஹீரோ இல்லை, நிதின் சத்யா தான் ஹீரோ, அவரது நண்பராக நடித்துள்ளேன், நான் ஹீரோ இல்லை, மக்களே நம்பாதிங்க என யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.