Actor vijay sethupathi | இந்த வாரம்... விஜய் சேதுபதி வாரம்..! இரண்டு நாளில் மூன்று படங்கள் ரிலீஸ்...!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் இன்றும், கடைசி விவசாயி மற்றும் துக்ளக் தர்பார் திரைப்படங்கள் நாளையும் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் திரையரங்குகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதனால், வெளியீட்டிற்கு தயாராக இருந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கியது. இந்த நிலையில், கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால், புதிய படங்கள் எதுவும் வெளியாகதாதால் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய். அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர் நடித்த பழைய திரைப்படங்களும், ஊரடங்கிற்கு முன்பு வெளியாகிய படங்களுமே திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டு கடந்த இரு வாரங்களாக கோலிவுட் பரபரப்பாகாத சூழலில், இன்று முதல் தமிழ் சினிமாக்களின் புதுவரவு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த லாபம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகிறது.
இந்த படத்தின் நாயகியாக விஜய் சேதுபதியுடன் சுருதிஹாசன் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெகபதி பாபு நடித்துள்ளார். அவர்களுடன் மறைந்த நடிகர் நிதிஷ்வீரா, கலையரசன், தன்ஷிகா, ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆறுமுககுமாருடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
லாபம் திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த கடைசி விவசாயி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனரான மணிகண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் முதியவர் நல்லாண்டி என்பவர் நடித்துள்ளார்.
அவருடன் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அயனங்கா போஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
நாளை கடைசி விவசாயி திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படமும் வெளியாகிறது. துக்ளக் தர்பார் நெட்பிளிக்ஸிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.
முழுக்க, முழுக்க கமர்ஷியல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக பார்த்திபனும் நடித்துள்ளார். அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு நாயகியாக ராஷி கண்ணா, மஞ்சுமா மோகன் நடித்துள்ளனர். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வியாகாம்18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
விஜய் சேதுபதி நடிப்பில் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது படங்களுடன் தலைவி, டிக்கிலோனா படங்களும் நாளை வெளியாக உள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும், அடுத்து சனி மற்றும் ஞாயிறு என்பதாலும், திரையரங்குகள் மீண்டும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.