Actor Suriya: கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்; கேப்டனை பூரண குணமாக்கி, நலம்பெற வைக்கும் - சூர்யா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் ஒரு முக்கியமான பேச்சாக இருப்பது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்ததுதான். ஏற்கனவே அவரது உடல் நிலை சீராக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவ, மருத்துவமனைத் தரப்பிலும் தேமுதிக தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்தின் உடல் நிலை விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்தும் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்களுக்கு விஜயகாந்துடனான அனுபவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமானதாக தகவல் வெளியான நிலையில், அவரின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமேலதா வதந்திகளை நம்ப வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள வீடியோவில், “தேமுதிக சொந்தங்களுக்கும், திரையுலகினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும், யூடியூப் சேனலை சேர்ந்தவர்களுக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன்னர் நான் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதில் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன். ஆனாலும், தொடர்ந்து கேப்டனை வென் டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கேப்டனை சந்தித்து எனக்கு ஆறுதல் சொன்னதைப் போலவும் தொடர்ந்து யூடியூப் சேனல்களும், மற்ற சேனல்களும் பொய்யான தகவல்களை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வதந்திச் செய்திகள் தொண்டர்களையும், நிர்வாகிகளையும், திரையிலகினரையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சளுக்கு கொண்டு செல்கிறது. கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் எந்தவொரு பரபரப்பும் இன்றி அமைதியான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பரபரப்புகளும், வதந்திகளும் வெளியில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றன. தயது செய்து மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
கேப்டன் நல்லா இருக்காரு. இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும். வெகு விரைவில் கேப்டன் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதனால், வீண் வதந்திகளையும், பரபரப்புகளையும் யாரும் நம்ப வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னைக்கு நானும் என்னுடைய இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியனும் கேப்டனை சந்தித்த புகைப்படத்தை கூட போட்டிருக்கிறோம். யாரும் வதந்திகளையும், பொய்செய்திகளையும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.