" உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
எல்லாரும் தான் திடீரென்று வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள் ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி தனக்கு ஐந்து ஆண்டுகள் தொலைக்காட்சியில் அனுபவம் இருந்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் பான் இந்திய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.ஏ.ஆர் மூருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு நடந்து வருகிறது. சினிமாத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடைசியாக அவர் நடித்த அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடி வசை வசூல் செய்துள்ளது. விஜயைத் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். தனது வளர்ச்சி குறித்து பலரும் பலவிதமாக பேசி வரும் நிலையில் சினிமாவில் தனது வளர்ச்சி பற்றி சிவகார்த்திகேயன் ஹாலிவுட் ரிப்போர் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
நீ யாரு டா இங்க வரனு கேட்டாங்க
" எனக்கு இந்த துறையை குற்றம் சொல்வதற்கு ஏதும் இல்லை. இந்த துறையில் இருக்கும் மனிதர்கள் மீது தான் குறை இருக்கிறது. என்னுடைய வளர்ச்சியை இங்கு இருக்கும் ஒரு சிலர் ஆதரவளித்து வரவேற்றார்கள். ஆனால் அதே நேரம் இன்னும் சிலர் இவன் யாரு , இவனுக்கு ஏன் இதெல்லாம் கிடைக்கனும் என்று தான் நினைத்தார்கள். என் முகத்திற்கு நேராக நீ யாருடா உனக்கு இங்க என்ன தகுதி இருக்கு என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் அவர்களிடம் ஏதும் பேசமாட்டேன். அவர்கள் பேசுவதை கேட்டு திரும்பி வந்துவிடுவேன். நான் என்னுடைய வெற்றியால் அவர்களுக்கு பதில் சொல்வேன் என்று கூட நினைக்கவில்லை. என்னுடைய வெற்றி என்பது என்னை நம்பும் ரசிகர்களுக்கும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுபவர்களுக்கானது . அண்ணா உங்களை மாதிரி நாங்களும் சாதிக்க நினைக்கிறோம் என சொல்லும் பலருக்கானது தான் என்னுடைய வெற்றி. சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பணம் மற்றும் புகழ் இருக்கும் துறைகளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கும் அது பிடித்தால் நாம் அதை எதிர்கொள்ளலாம். இல்லை என்றால் விட்டு விலகி விடலாம்.
பலர் நான் திடீரென்று வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் திடீரென்று எல்லாம் வரவில்லை. எனக்கு. ஐந்து ஆண்டுகள் விஜய் டிவியில் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது. அதன் பிறகு தான் நான் சினிமாவிற்குள் வருகிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்