12 Years of Sivakarthikeyan: ஹீரோவாக 12 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்து!
சின்னத்திரையில் தனது திறமையால் கலக்கிய நபர்களுக்கு எல்லாம் பெரிய திரையில் இடம் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறி தான்.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க வந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சின்னத்திரையில் தனது திறமையால் கலக்கிய நபர்களுக்கு எல்லாம் பெரிய திரையில் இடம் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறி தான். அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தாலும் அதில் பெரிய அளவு வெற்றி பெற்றார்களா? என்றாலும் அதுவும் குறைவு தான். அந்த குறைவான நபர்களில் தற்காலத்தில் சிறந்து விளங்கி வருபவர்களில் முதன்மையானவர் சிவகார்த்திகேயன். அவர் முன்னேற நினைக்கும் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.
கைக்கொடுத்த மிமிக்ரி திறமை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் கல்லூரி சமயங்களில் தனது மிமிக்ரி திறமையால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பின்னர் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவுக்கு உயர்ந்தார். இதனிடையே அஜித் நடித்த ஏகன், தனுஷ் நடித்த 3 மற்றும் சில விளம்பரங்கள், குறும்படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
அவரின் பேச்சில் இருந்த ஒரு நகைச்சுவை திறன், இயக்குநர் பாண்டிராஜையும் கவர்ந்தது. தனது மெரினா படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தார். அந்த படம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீசானது. இதற்கிடையில் 3 படத்தின் ஷூட்டிங்கில் சிவாவின் திறமையை தனுஷ் நன்கு அறிந்திருந்தார். அதனால் தனது தயாரிப்பில் உருவான படத்தில் அவரை ஹீரோவாக்க முடிவு செய்தார்.
12 years of SK'ism🔥keep motivating us na. gearing up for 13th year cine industry to smash records 💥🥳 #12YearsofSelfMadeStarSK #PrinceSK #Sivakarthikeyan pic.twitter.com/atEmIl30DN
— navin2904 (@Navin_2904) February 3, 2024
எதிர்நீச்சல் படம் வெளியாகி சிவகார்த்திகேயனை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டார்கள். இதன் பின்னர் வெளியான மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்கள் சிவாவுக்கு ஒரு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்தது.
கொண்டாட வைத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான். நகரம் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை சிவாவை கொண்டாடதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். போஸ் பாண்டியாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார். இதன் பின்னர் மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரேமோ, வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், அயலான் என தொடர்ச்சியாக ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக கொடுத்து வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அடியையும் சினிமாவில் எடுத்து சாதித்து வருகிறார். அவர் திரையில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்..!