8 Years of Inimey Ippadithan: வழக்கமான சந்தானம் படம்.. ஆனால் வித்தியாசமான கிளைமேக்ஸ்.. 8 ஆண்டுகளை கடந்த ‘இனிமே இப்படித்தான்’..!
காமெடி உலகில் முன்னணி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் “இனிமே இப்படித்தான்” . இந்த படம் வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
காமெடி உலகில் முன்னணி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவராவது இரண்டாவது படமாக இனிமே இப்படித்தான் படம் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் சந்தானம், அகிலா கிஷோர், ஆஷ்னா சவேரி, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், பிரகதி, கூல் சுரேஷ்,பெப்சி விஜயன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்த நிலையில் சந்தானத்துக்கு பல படங்களில் நகைச்சுவை காட்சிகளை எழுதி கொடுத்த முருகனும் ஆனந்தும் இணைந்து இப்படத்தை முருகானந்த் என்ற பெயரில் இயக்கியிருந்தார்கள்.
கதைப்படி சந்தானத்துக்கு மூன்றுமாதங்களுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்கிறார்கள். அதனால் அவருடைய பெற்றோர் அவசர அவசரமாகப் பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். அதற்குள் சந்தானத்துக்கு இன்னொரு பெண் மீது காதல் வந்துவிடுகிறது. காதலியைக் கல்யாணம் செய்தாரா? நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தாரா? என்று சொல்வதுதான் படம்.
சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை கவுண்டர் டயலாக்குகள் காரணமாக இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறாவிட்டாலும் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்றாக அமைந்திருந்தது. பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவுக்கு படத்திற்கு பொருந்திப் போன நிலையில் காட்சிகளில் இருந்த கவனம் கதையில் இல்லாததால் படம் காமெடி காட்சிகளைத் தவிர மற்ற இடங்களில் ரசிக்கும் படியாக அமையாமல் போனது. இருந்தாலும் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் சந்தானத்தின் காமெடி மிஸ் ஆகாமல் இருந்த படங்களில் இதுவும் ஒன்று.
சந்தானம் இதன்பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டாலும் ரசிகர்கள் அவரை மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவரும் தன் முடிவை மாற்றுவார் என காத்து கிடக்கிறார்கள். இப்படியான நிலையில் அவ்வபோது வித்தியாசமாக கதைகளை தேர்வு செய்யும் சந்தானம், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் காமெடி கதைக்களம் கொண்ட கொண்ட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.