Samuthirakani: "எவ்வளவோ கெஞ்சினேன்.." படம் எடுப்பதையே நிறுத்திய சமுத்திரகனி.. என்ன காரணம் தெரியுமா?
'அப்பா' என்ற படம் எடுத்து எந்தளவு கெஞ்சினேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படத்தின் சேட்டிலைட் உரிமைக்காக பெரிய பெரிய நிறுவனங்களிடம் சென்று படம் ரிலீஸ் ஆன பிறகும் கெஞ்சினேன்.
படம் எடுக்கும்போது இருக்கும் சந்தோஷம் ரிலீஸ் ஆகும்போது இல்லை என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் படத்திலும், அண்ணி சீரியலிலும் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரகனி. தொடர்ந்து சில சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் இயக்கிய அவர் 2003 ஆம் ஆண்டு நடித்த உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் என சில படங்களையும் இயக்கியுள்ளார்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் கலக்கி வரும் சமுத்திரகனி கடைசியாக 2018 ஆம் ஆண்டு தொண்டன் என்ற படத்தை இயக்கினார். இப்படம் தான் தியேட்டரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து எடுத்த வினோதய சித்தம் ஓடிடியில் வெளியானது. அவர் மீண்டும் படம் இயக்க சொல்லி பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஒரு நேர்காணலில், “இயக்குனர் சமுத்திரக்கனியாக நான் பேசாமல் அமைதியாக இருக்கிறேன். ஒன்னு பெருசா பேசணும் இல்லையா அமைதியா இருக்கணும் என்ற மனநிலையில் தான் உள்ளேன். என்னிடம் சின்ன பட்ஜெட்டில் பண்ணக்கூடிய ஆயிரம் குட்டிக் கதைகள் உள்ளது. என்னை ஒரு 25, 30 நாட்கள் விட்டால் ஒரு படம் எடுத்து விடுவேன். அதை எடுத்துவிட்டு கொண்டு போய் சேர்க்க வேண்டிய போராட்டம் இருப்பதை பார்த்து தான் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன். படம் எடுத்து ஒவ்வொருத்திரையும் கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது.
'அப்பா' என்ற படம் எடுத்து எந்தளவு கெஞ்சினேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படத்தின் சேட்டிலைட் உரிமைக்காக பெரிய பெரிய நிறுவனங்களிடம் சென்று படம் ரிலீஸ் ஆன பிறகும் கெஞ்சினேன். சார் ஒரு முறை படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்க வேண்டாம் எனவும் தெரிவித்தேன். ஆனால் அந்தப் படத்தை பார்க்க கூட அவர்களுக்கு மனம் இல்லை. அப்போதுதான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. எங்கு வாய்ப்பு சரியாக இருக்கிறதோ அங்கு போய் வேலை செய்யலாம் என நினைத்தேன். ஓடி ஓடி உழைத்து எல்லாம் வீணாகத்தானே போகிறது. எனக்கு இந்த ரூட்டில் சென்றால் மிகப் பெரிய கோபம் வரும் என்பதால் செல்லாமல் இருக்கிறேன். படம் எடுக்கும்போது இருக்கும் சந்தோசம் ரிலீஸ் ஆகும் போது இல்லை” என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.