Nallakannu: செயலிழந்த உறுப்புகள்.. முடிவுக்கு வந்த போராளி வாழ்க்கை.. மறைந்தார் நல்லகண்ணு!
Nallakannu Latest News: நல்லகண்ணுக்கு வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போவதும், அதற்கு சிகிச்சையெடுப்பதும் தொடர்கதையாக இருந்த நிலையில் இன்று காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமனார். அவரது மறைவு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101வது வயதில், வயது மூப்பு பிரச்னையாலும், உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிறுநீரகத்தில் உப்பு அளவு கூடியதாகவும், இதன் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மூச்சு விட சிரமப்படும் நல்லகண்ணுவுக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நல்லகண்ணுவை காண முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி திமுக கூட்டணியில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போவது, பின்னர் சிகிச்சைக்குப் பின் தேறி வருவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சிகிச்சையில் இருந்து வரும் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கவலையடைந்தனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் உடல்நிலைப் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகிறது. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த 20 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நிலையில் சீரான இயக்கமும், முன்னேற்றமும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவர் சிக்கலான முறையில் இருந்து தாண்டவில்லை. நல்லகண்ணு இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























