Porur to Vadapalani Metro Rail : போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
Porur to Vadapalani Metro Rail : சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ள நிலையில், போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை எப்போது இயக்கப்படும் என்ற முக்கிய முடிவு இன்று எடுக்கப்படவுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவையாக மாறிவிட்டது சென்னை மெட்ரோ ரயில், அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கிண்டி, அண்ணாசாலை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 99% பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்காக தயாராக உள்ளது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை. அந்த வகையில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில்
போரூர் - வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள், பயணிகளுக்கான வசதிகள் என இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்றது. இதனையடுத்து இன்று 3ஆம் மற்றும் இறுதிக்கட்ட ஆய்வானது இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து கட்ட சோதனை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது போரூர் -வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் -இன்று இறுதிக்கட்ட ஆய்வு
எனவே இன்றைய இறுதி கட்ட சோதனைக்கு பிறகு இந்திய ரயில்வே வாரியத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு இந்திய ரயில்வே வாரியம் மெட்ரோ ரயில்களை இயக்க முறையான அனுமதி சான்றிதழ் வழங்கும்.எனவே விரைவில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சான்றிதழ் கிடைக்கும். இதனை தொடர்ந்து மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆனால் இந்த பகுதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், பயணிகளுக்கு முதல் கட்ட மெட்ரோ வழித்தடங்களுக்கு போதிய வசதிகள் இருக்காது என்பதாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கருதப்பட்டது.
எந்த எந்த ரயில் நிலையங்களில் நிற்கும்
இதனையடுத்து போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது இன்னும் முடிவடையவில்லை. எனவே இந்த வழித்தடத்தில் உள்ள எந்த ரயில் நிலையங்களிலும் தற்போது மெட்ரோ ரயில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள எந்த நிலையங்களிலும் நிற்காமல் (Non-stop) மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.























