வடசென்னையில் அமீரை வச்சு செய்த சமுத்திரக்கனி - அப்படி என்ன பண்ணாரு?
வடசென்னை படப்பிடிப்பின்போது சமுத்திரக்கனி செய்த சேட்டைகளை இயக்குனரும், நடிகருமான அமீர் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வடசென்னை. தனுஷ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களுடன் கிஷோர், பவன், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா கிஷோர் என பலரும் நடித்திருப்பார்கள்.
அமீரை வச்சு செய்த சமுத்திரக்கனி:
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை அமீர் மேடையில் பேசியிருப்பார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீர் பேசியதாவது,
வட சென்னையில நான் நடிக்கப்போயிருந்தேன். என்னையை வச்சு செய்றாங்க. இவன் ( சமுத்திரக்கனி) எல்லாரும். படப்பிடிப்பு முதல்லயே ஆரம்பிச்சுட்டாங்க. நான் பாதியிலதான் போய் சேந்தேன். வாங்கண்ணே.. வாங்கண்ணே.. வந்து உக்காருங்க. வந்து நம்ம சங்கத்துல சேருங்க.
பெரிய பெரிய ஆளா இருக்காங்க. இந்தபக்கம் கிஷோர், ஒன்னு தீனா, அந்த பக்கம் பவன், டேனியல் பாலாஜி. கனி எக்ஸ்பர்ட் ஆகிட்டான். வெற்றி சொல்றாரு டயலாக் எல்லாம் வாங்கி வச்சுக்குறாப்ள. முதல்லயே மனப்பாடம் பண்ணிக்குறாரு. மனப்பாடம் பண்ணி முடிச்சுட்டு அண்ணே தம்மு போட்றீங்களா? அப்டிங்குறாரு. இருடா டயலாக் பாத்துக்குறேன்டானு சொல்வேன்.
அசந்து போன அமீர்:
ஷாட்க்கு முன்னாடி வரை எதையாவது பண்ணிட்டு இருப்பான். விக் ஒன்னு வச்சுருப்பான். ஷாட் ரெடினு சொன்னாதும் அவசரம், அவசரமா விக்கை மாட்டுவான். அது ஒழுங்கா கூட நிக்காது. அண்ணே விடுங்கண்ணே, அத பாருங்க டேக்க்கு முன்னாடி சரியாகிடும் பாருங்க.
சாப்பிட்ற சீன் நானும், ஆண்ட்ரியா எல்லாரும் உக்காந்து இருக்கோம். எல்லாரும் பேசிட்டு வந்துட்டு நான் எல்லாருக்கும் கவுன்டர் கொடுக்கனும். அவன் டயலாக் சரியா சொல்லிட்டான். டேக் போறது வரைக்கும் என்கூட பேச்சு கொடுத்துட்டு இருந்தான். எனக்கு டயலாக் வரலன்னா அவன் சாப்பிட்டுகிட்டே என் டயலாக்கையும் எடுத்துக் கொடுக்குறான். நான் அசந்துட்டேன்.
இவ்வாறு அமீர் பேசினார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
இந்த படத்தில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அமீர் மட்டுமின்றி கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி என ஒவ்வொருவரின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இந்த படம் ரூபாய் 85 கோடி ரூபாய் வரை வசூலை குவித்ததாக கூறப்படுகிறது.
மெளனம் பேசியதே படம் மூலமாக இயக்குனரான அமீர் ராம், பருத்திவீரன், ஆதி பகவான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆதி பகவான் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். யோகி படத்தில் கதாநாயகனாக நடித்த அமீர், மாறன், உயிர் தமிழுக்கு, பைசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மாயவலை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
அமீர், சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் பாலாவிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். இவர்கள் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுமகேந்திராவிடம்தான் பாலாவும் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.




















