RJ Balaji: இளைஞர்களை கொம்பு சீவி விடாதீங்க... யூட்யூப் சேனல்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்
ரன் பேபி ரன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் யூட்யூப் சேனல்களுக்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ரன் பேபி ரன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் யூட்யூப் சேனல்களுக்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ரன் பேபி ரன்”. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண் குமார் மற்றும் வெங்கட் இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரன் பேபி ரன் பிப்ரவரி 3 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, அந்த 7 நாட்கள் படம் எடுத்த பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ண குமார் எனவும், அவர் மிகவும் திறமையானவர் என புகழ்ந்தார். மேலும் படத்தின் முக்கியத்துவத்தை புரிந்து நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நன்றி தெரிவித்தார்.
View this post on Instagram
ரன் பேபி ரன் திரைப்படம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு த்ரில்லராக இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”இங்கு வந்து இருக்கும் ஊடகத்தினருக்கு, குறிப்பாக சமூக வலைத்தள பயனாளர்கள், யூட்யூப் சேனல்களுக்கு ஒரு வேண்டுகோள். இளைஞர்களுக்கு பயன்படும் விஷயங்களை கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களை கொம்பு சீவி விடாதீர்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விஷயங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும். அதைவிட்டுவிட்டு அவர்களை தவறான பாதையில் தூண்டும் வகையில் கண்டெண்ட் கொடுக்காதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், “மற்றபடி படம் வெளியானால் விமர்சனம் பண்ணுங்க. எல்லோரும் அவர்களின் கருத்தை சொல்ல வேண்டும். கஷ்டமாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ரசிகர்களை கவரும் ஆர்.ஜே.பாலாஜி
ரேடியோ ஜாக்கியாக ரசிகர்களிடத்தில் பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் சிறுவேடத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசணும், வடகறி, நானும் ரௌடி தான், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம், ஸ்பைடர், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவானார்
அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் முதன்மை வேடத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.