Actor Silambarasan TR: "சிம்பு இயக்குநரானால் மிகப்பெரிய அளவில் வருவார்”: நடிகர் மீசை ராஜேந்திரன் புகழாரம்
சிம்பு இயக்குநரானால் மிகப்பெரிய அளவில் வருவார் என நடிகர் மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிம்பு இயக்குநரானால் மிகப்பெரிய அளவில் வருவார் என நடிகர் மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கம்பேக் கொடுத்த சிம்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் சிலம்பரசன் சிறிது இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவர் மேல் எழுந்த சர்ச்சைகளுக்குப் பிறகு மாநாடு படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, சமீபத்தில் வெளியான பத்து தல படம் என அவர் தொடர் வெற்றிகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனிடையே சினிமாவில் காமெடி, வில்லன் உள்ளிட்ட காட்சிகளில் துணைவேடங்களில் நடித்தவர் மீசை ராஜேந்திரன். இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் சிம்புவை பற்றி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் நெறியாளர், சிம்புவை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த நடிகர் மீசை ராஜேந்திரன், லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர். உட்பட 4 பட்டங்கள் சின்ன வயதிலேயே நடிகர் சிலம்பரசனுக்கு கிடைத்து விட்டது. அவரின் 20 வது வயதில் தான் காதல் அழிவதில்லை படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார் என நினைக்கிறேன். இப்ப கிட்டதட்ட 50 படங்கள் நெருங்கி விட்டார். பொதுவாக திறமை இருப்பவர்கள் திரும்ப வருவார்கள். அந்த வகையில் எல்லா விஷயத்திலும் சிம்பு திறமையான ஆளு. நான் அவருடன் 3 படங்களில் பணியாற்றியுள்ளேன். வல்லவன், காளை, ஒஸ்தி ஆகிய 3 படங்கள் தான் அவை.
சிம்புவின் இன்னொரு முகம்
நான் அவருடைய குத்து படத்தின் ஷூட்டிங்கை பார்த்துள்ளேன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடந்த ஷூட்டிங்கில் மழையில் ஹீரோ, ஹீரோயின் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி முடிந்ததும் நான் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருகிறேன் என சொல்லி சென்றார். அவரால் அந்த படக்குழுவினர் 2 மணி நேரம் காத்திருந்தது. அப்ப அவர் பக்குவப்படவில்லை. இப்போது பக்குப்பட்டு விட்டார்.
வல்லவன் படத்தை சிம்பு தான் இயக்கினார். நான் போலீஸாக நடித்தேன். சிம்பு என்னிடம் காட்சியை சொன்னார். நான் அவரை அடிக்க வேண்டுமென சொன்னார். நான் எப்படி உங்களை அடிக்க முடியும் என கேட்டேன். உடனே காட்சிக்கு தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொடுத்து நடிக்க சொன்னார். அந்த காட்சி இயற்கையாக வந்தது. என்னைப் பொறுத்தவரை சிறந்த இயக்குநர்கள் என்றால் முதலிடத்தில் பாலாவும், இரண்டாவது இடத்தில் மலையாள இயக்குநர் ஜோஷியும், அதற்கடுத்த இடத்தில் சிம்பு தான் என நான் சொல்வேன். அவர் இயக்குநரானால் மிகப்பெரிய அளவில் வருவார்.