Kavin: லேட்டா வந்தேனா.. கல்லூரி விழாவில் தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி தந்த நடிகர் கவின்!
Actor Kavin: கவின், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவது கிடையாது, படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என முன்னதாகத் தகவல்கள் வெளியாகின
நடிகர் கவின் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதாக தயாரிப்பாளர் ஒருவர் மனம் திறந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்தத் தகவல்களுக்கு பதிலடி தரும் வகையில் கல்லூரி விழா ஒன்றில் கவின் (Actor Kavin) பேசியுள்ளார்.
படிப்படியாக வளர்ந்த கவின்
சின்னத்திரை சீரியல்களில் தொடங்கி பிக்பாஸ் வழியாக ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகர் கவின். பல தடைக்கற்கள், விமர்சனங்கள் தாண்டி படிப்படியாக நடிப்புப் பயணத்தில் வளர்ந்து, இன்று தனக்கென ஒரு தனி இடத்தை அடைந்திருக்கும் கவினுக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
குறிப்பாக சென்ற ஆண்டு வெளியான டாடா திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்த நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் அவரது வெற்றிகரமான திரைப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துள்ளனர்.
தயாரிப்பாளர் குற்றச்சாட்டு?
இந்நிலையில், கவினை வைத்து வரவிருக்கும் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர், பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசுகையில் கவின் பற்றி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. தயாரிப்பாளரின் பெயர் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்படாத நிலையில், “கவின், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவது கிடையாது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் வேனிட்டி ரூமில் அதிக நேரம் செலவு செய்கிறார். அவரின் இந்த செயல்களால் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது” என அந்த தயாரிப்பாளர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து, கவின் பற்றி தயாரிப்பாளர் பேசிய இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், தயாரிப்பாளரின் பெயர் குறிப்பிடாமல் இப்படி ஒரு தகவலா என அவரது ரசிகர்கள் சாடி வந்தனர். மேலும், கவின் ரசிகர்கள் கவினின் நேரம் தவறாமைப் பற்றி தயாரிப்பாளர், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் பேசிய வீடியோக்களை பகிர்ந்து பதிலடி கொடுத்து வந்தனர்.
பதிலடி தந்த கவின்
இந்நிலையில், முன்னதாக திருச்சி தனியார் கல்லூரி ஒன்றில் கலந்துகொண்டு கவின், தன்னைப் பற்றிய இத்தகைய தகவல்களுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கல்லூரிக்கு வந்தவுடன் “ஏதும் லேட்டாகிடுச்சா?” என்று மறைமுகமாகத் தாக்கிய நடிகர் கவின், தன்னிடம் 7 மணிக்கு வரும்படி சொன்னதாகவும், ஆறு மணி முதல் தான் கிளம்பி காத்திருந்தாதாகவும், கல்லூரி தரப்பில் தான் ஆறே முக்காலுக்கு வந்து தன்னை அழைத்ததாகவும் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
மேலும் “படிக்கும் மாணவர்களுக்கு தப்பான இன்ஸ்பிரேஷனான இருக்கக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இப்போது இருக்கிறேன். ஆனால் இப்போ போய் நாம் பள்ளியில் செய்தது, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் ஆனதெல்லாம் கூறி தவறாக இன்ஸ்பயர் செய்து விடக்கூடாது. இது எல்லோர் வாழ்க்கையிலும் இருந்து தான். அது அப்படியே போய்டுச்சு” என்றும் கவின் பேசியுள்ளார்.
#Kavin's reply to the today's controversy 😀pic.twitter.com/ftUzHkw5PE
— AmuthaBharathi (@CinemaWithAB) March 9, 2024
கவினின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.