Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..
Love Today : கார்த்திக்குமாரிடம், வயதும், அனுபவம் கொடுக்கும் மாற்றங்கள் பற்றியும், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நாம் முன்னால் பேசியதுடன் தற்போது பேசியது ஒப்பீடு செய்யப்படுவது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.
லவ் டுடே (Love Today) படம் எடுத்ததற்காக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நிச்சயம் வருத்தப்படுவார் என நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.
வானம் வசப்படும், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, பொய் சொல்லப் போறோம், நினைத்தாலே இனிக்கும், தெய்வத் திருமகள், வெப்பம், பசங்க-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கார்த்திக் குமார். இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் குமாரிடம், வயதும், அனுபவம் கொடுக்கும் மாற்றங்கள் பற்றியும், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நாம் முன்னால் பேசியதுடன் தற்போது பேசியது ஒப்பீடு செய்யப்படுவது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, இயக்குநர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு, “அடிடா அவளை.. உதைடா அவளை” என படத்தில் பெண்களை வெறுக்கும் அளவுக்கு பாடல் வரிகளை வைத்தார். ஆனால் இன்று அப்படி பண்ணியிருக்கக் கூடாதோ என வருத்தப்பட்டார்.
இப்ப பிரதீப் ரங்கநாதன் வந்து லவ் டுடே படம் பண்ணுனார். அந்தப் படம் பெண்களை வெறுக்கும் அளவுக்கு ஒரு படமாக இருந்தது என்றே சொல்லலாம். அது 2 பக்கமும் நடக்கும் கதையாக சமமாக இல்லாமல், அது ஒரு ஆணின் பார்வையிலிருந்து இருக்கும் ஒரு கதையாக இருந்தது. அந்த படம் எல்லார் மத்தியிலும் ஹிட் ஆகிவிட்டது.
ஒருவேளை 10 ஆண்டுகள் கழித்து பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை திருப்பி பார்த்தால் இந்த படத்தை நாம் ஏன்டா எடுத்து இருக்கக்கூடாது என்று நினைப்பார் என கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஹிட் முதல் விமர்சனம் வரை
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்ட இந்த திரைப்படம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் சமீபத்தில் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. தியேட்டரை விட்டு ஓடிடி தளத்திற்கு வந்த இப்படம் கடுமையாக விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில், காட்சிகள் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.