Kamal Haasan Workout: இளமை இதோ இதோ... முரட்டு உடற்பயிற்சி செய்யும் கமல்ஹாசன்... வைரலாகும் பழைய ஃபோட்டோ!
இளமைக் காலத்தில் நடிகர் கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
தனது 68 வயதிலும் படங்களில் அசாதரமான ஸ்டண்ட் காட்சிகளை செய்துவருகிறார் கமல்ஹாசன். இதற்கு முக்கியக் காரணம் தனது உடல் ஆரோக்கியத்தை அவர் கட்டுக்கோப்பாக பராமரித்து வருவதே. தனது இளமைக் காலம் முதலே தனது ஃபிட்னசின் மேல் தீவிர கவனம் செலுத்தி வந்தவர் கமல்.
கமல்ஹாசன்
‘நான் தான் சகலகலா வல்லவன்' என்ற பாடலின் வரிகளுக்கேற்ப திரைத்துறையில் ஒரு ஜாம்பவானாக 60 ஆண்டு காலமாக பயணித்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடன ஆசிரியர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் தனது திறமையை நிரூபித்தவர். சினிமா மீது அவருக்கு இருந்த அளவுக்கு கடந்த காதல் தான் அவரை சர்வதேச அளவில் ஒளிர செய்கிறது.
அடுத்த தலைமுறையினராலும் அவரின் திறமை வியந்து பார்க்கும் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தி வருபவர் கமல்ஹாசன். 1960இல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தொடங்கிய அவரின் பயணம், இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் அனைத்து மொழிகளிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர்.
இந்நிலையில், தற்போது கமல் உடற்பயிற்சி செய்யும் அவரது இளமைக்காலப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
விருதுகள்
உலகநாயகன் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய விருதுகள் மற்றும் பிரான்ஸ் அரசு வழங்கும் மிகவும் உயரிய விருதான செவாலியர் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
விக்ரம் அடுத்து இந்தியன் 2
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார் கமல். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நாயகன் படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதால் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, துணிவு, தீரன் படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்.
பிரபாஸ் படத்தில் வில்லன்
மேலும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு தோற்றத்தில் அவரை பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.