14 Years of Peranmai: ஜெயம் ரவியை ஆக்ஷன் ஹீரோவாக்கிய “பேராண்மை” .. இன்றோடு ரிலீசாகி 14 வருஷமாச்சு..!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “பேராண்மை” படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “பேராண்மை” படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்த ஜெயம் ரவி
2009 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 16 ஆம் தேதி வெளியானது பேராண்மை திரைப்படம். இயற்கை, ஈ என வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். பேராண்மை படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த நிலையில் ஜெயம் ரவி, வசுந்தரா காஷ்யப், சரண்யா நாக், தன்சிகா, வர்ஷா அஸ்வதி, ஊர்வசி, வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், ரோலண்ட் கிக்கிங்கர் என பலரும் நடித்திருந்தனர்.
படத்தின் கதை
துருவன் (ஜெயம் ரவி) காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த நபர். அவர் நன்கு படித்து வனத்துறையின் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊரில் என்சிசி பயிற்சிக்காக வரும் வசுந்தரா காஷ்யப், சரண்யா நாக், தன்சிகா, வர்ஷா அஸ்வதி, லியாஸ்ரீ ஆகிய 5 மாணவிகளை தேர்வு செய்து காட்டுக்குள் பயிற்சிக்காக அழைத்து செல்ல திட்டமிடுகிறார். ஆனால் பழங்குடியினத்தவர் என்ற காரணத்தால் மாணவிகளை வேண்டா வெறுப்பாக உடன் செல்கின்றனர். செல்லும் இடத்தில் மாணவிகள் செய்யும் குறும்புத்தனத்தால் காட்டுக்குள் இரவு தங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்நேரம் காட்டுக்குள் மர்ம நபர்கள் ஊடுருவல் இருப்பதை இந்த குழு கண்டறிகிறது. இந்தியாவால் ஏவப்படும் ராக்கெட்டை தகர்க்க வெளிநாட்டு நபர்கள் செய்யும் சதி என்பதை தெரிந்துக் கொண்ட ஜெயம் ரவி மற்றும் 5 பெண்களும் எப்படி ஆபத்தை தகர்க்கின்றனர் என்பதே இப்படத்தின் கதையாகும்.
கமல்ஹாசனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நடிகர் கமலை மனதில் வைத்தே இப்படத்தின் கதையை எழுதியிருந்தார். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் ஜெயம் ரவி இப்படத்தில் ஒப்பந்தமானார். என்னதான் சாக்லேட் பாயாக படங்களில் வந்த ஜெயம் ரவி, இப்படத்துக்காக ராம்போவில் வரும் சில்வெஸ்டர் ஸ்டலோனை போல கட்டுமஸ்தான உடலைப் பெற்றார். இந்த கெட்டப் அவரை ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்த காரணமாக அமைந்தது.
வனத்துறை உயரதிகாரியாக வரும் பொன்வண்ணன், ஜெயம் ரவியை சாதியை சொல்லி சக மாணவிகள் முன்னால் அவமானப்படுத்துவதும், கிளைமேக்ஸில் ரவி மற்றும் பெண்கள் செய்த சாதனையை தனதாக்கி கொண்டு விருது வாங்குவதும் என முதலாளித்துவ சித்தாந்ததை அப்பட்டமாக பேசி சவுக்கடி கொடுத்திருந்தார். அதேபோல் வகுப்பறையில் பண்டமாற்று முறை பற்றி பேசும் காட்சியிலும் கம்யூனிச அரசியல் பேசியிருந்தார்.
இப்படத்தில் வில்லனாக வந்த ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் மிரட்டியிருப்பார். பார்ப்பதற்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் போல இருந்தாலும் நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் அசத்தியிருந்தார். பாடல்களும் படத்திற்கு பலமாக அமைந்த நிலையில், இப்படம் தேசிய பற்றை காட்டும் படங்களில் மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Prithviraj Sukumaran: ’ஹீரோ என்ற எல்லைகளுக்குள் அடங்காதவர்’ .. நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் பிறந்தநாள் இன்று..!