Prithviraj Sukumaran: ’ஹீரோ என்ற எல்லைகளுக்குள் அடங்காதவர்’ .. நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் பிறந்தநாள் இன்று..!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக வலம் வரும் “பிரித்வி ராஜ்” இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக வலம் வரும் “பிரித்வி ராஜ்” இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மலையாள தேசத்து நாயகன்
திருவனந்தபுரத்தில் சேர்ந்த பிரித்வி ராஜனின் குடும்பத்தில் அனைவரும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். சென்னை மற்றும் குன்னூரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறும்படங்களில் நடித்தும், பேச்சுப் போட்டிகளில் தனது திறமையையும் அசத்தினார்.
சினிமாவில் அறிமுகம்
படிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்பிய பிரித்விராஜ், 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் பாசிலால் நடிகராக அறிமுகம் செய்ய டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி எடுபடாமல் போக, பாசில் பரிந்துரையின் பேரில் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரித்விராஜ். 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட்ஸ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படியான நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் பிரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தார்.
தமிழில் எண்ட்ரீ
கனா கண்டேன் படத்தில் வில்லனாக தோன்றினார். அவரை இயக்குநர் கே.பாக்யராஜ் 2006 ஆம் ஆண்டு தனது பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்து பல படங்களிலும், தமிழில் நல்ல கதையாக தேர்வு செய்தும் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார் பிரித்விராஜ்.
தமிழில் சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, ராவணன், காவியத்தலைவர் என மிகவும் கனமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டுக்குப் பின் அவர் தமிழில் நடிக்கவே இல்லை. இவரின் சில படங்கள் மலையாளத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
இயக்குநராக அறிமுகம்
இப்படியான நிலையில் தான் மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான “லூசிபர்” படத்தின் மூலம் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ப்ரோ டாடி என்ற காமெடி படம் கொடுத்தும் ரசிக்க வைத்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ப்ரித்விராஜ் பல படங்களில் திரைக்கதையாசிரியாக பணியாற்றியுள்ளார்.
பிரித்விராஜின் சினிமா கேரியரை சரியாக கணிக்கவே முடியாது. அவரை நாம் ஒரு வட்டத்துக்குள் சுருக்கவே முடியாது. ஹீரோ,வில்லன், காமெடி, பாடகர் என எந்த ரோல் கிடைத்தாலும் மனிதர் பிரித்து விடுவார். அந்த அளவுக்கு மிகத்திறமையான நடிகர்களில் ஒருவர். அடுத்ததாக ஆடுஜீவிதம், சலார் பார்ட் 1 ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படிப்பட்ட நடிகரை உண்மையில் திரையுலகினர் சரியாக பணியாற்றிக் கொள்ள வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரித்விராஜ் சுகுமாறன்...!