“தாடியை எடுத்தேன்... ஹோட்டலுக்கு உள்ளே கூட என்னை விட மாட்டேனுட்டாங்க“ - நடிகர் சசிகுமார்
"நாடோடிகள் படத்துல நான் சிரிப்பது என்னுடைய சிரிப்பே கிடையாது."
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகருள் ஒருவர் சசிகுமார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலமாக நடிகராகவும் , இயக்குநராகவும் அறிமுகமானார். பாலா, அமீர் உள்ளிட்ட இயக்குநர்களிடம் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். தற்போது இயக்கத்தை கிடப்பில் போட்டு , கதாநாயகனாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாக சசிகுமார் என்றாலே தாடியை எடுக்கவே மாட்டார் என கோலிவுட் பக்கம் டாக் உள்ளது. இது குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்தார்.
அதில்"என்னுடைய இரண்டாவது படம் நாடோடிகள். அதனால அப்போ ஒரே ஒரு காட்சிக்காக தாடியை எடுத்தேன். அதன் பிறகு நிறைய படங்களில் தாடி இல்லாமல் ஒப்புக்கொள்ளவில்லை. காவல்துறை கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க என்னை அணுகினார்கள். நல்ல கதை. ஆனால் காவல்துறை அதிகாரி என்பதால் கிளீன் ஷேவ் செய்ய வேண்டும் என கூறவே படத்தை வேண்டாம் என நிராகரித்துவிட்டேன். தாரை தப்பட்டை படத்தில் முதலில் தாடி இல்லாமல்தான் நடிக்க டெஸ்ட் ஷூட் எடுத்தோம். அதில் தாடியை எடுத்துவிட்டு , மீசையை குறைத்துவிட்டு பழைய சட்டை, வேஷ்டி போட்டுக்கிட்டு நான் பாட்டுக்கும் பாண்டி பஜார் ரோட்டில் நடந்து போனேன். அப்போது முதலில் சமுத்திரக்கனிக்குதான் கால் செய்தேன் . ”சகோ எங்க இருக்கீங்க?” என கேட்டதும், அவர் அங்குள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இருப்பதாக கூறினார். அதே வேஷத்தில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு போனா உள்ளே விடவில்லை. என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அதன் பிறகு சகோ, என்னை உள்ளே விடவில்லை என சமுத்துரக்கனிக்கு அழைத்தேன். அவருக்கு நான் எப்படி வந்திருக்கிறேன் என தெரியாது. உடனே அவர் ஏன் விடமாட்டுறாங்க என வந்தார். வந்து சமுத்திரக்கனி பார்த்துவிட்டு , ”ஏய் .. எனக்கே அடையாளம் தெரியலை.. ஏன் உள்ளே விடலை என கேட்க வேஷ்டி கட்டியிருக்காருனு சொல்ல, சமுத்திரக்கனி வேட்டி கட்டினா விடமாட்டீங்களா என கத்த, சாரி சார் யாருனு அடையாளம் தெரியலை அதான் என்றார். அதன் பிறகு உள்ளே போய் நடந்ததை நினைத்து சிரித்தோம். நாடோடிகள் படத்துல நான் சிரிப்பது என்னுடைய சிரிப்பே கிடையாது. நமோ நாராயணன்னு ஒரு நடிகர் இருக்காருல்ல அவருடைய சிரிப்பு. எனக்கு சத்தமாக சிரிக்க வரலைனு அவரை சிரிக்க சொல்லி , அதை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு எந்த படத்துலையும் அப்படி நான் சிரித்ததே கிடையாது. மிமிக்ரி செய்பவர்களுக்கு அந்த வாய்ஸ் எளிமையாகிவிடுவதால் அதை செய்து ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்“ என பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் சசிகுமார்.