Actor Dhanush: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய தனுஷின் மூத்த மகன்.. வீட்டுக்கே சென்று அபராதம் விதித்த போலீசார்..!
நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா போக்குவரத்து விதிகளை மீறி பைக் ஓட்டிய குற்றத்திற்காக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா போக்குவரத்து விதிகளை மீறி பைக் ஓட்டிய குற்றத்திற்காக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். பன்முக திறமைக் கொண்ட அவரின் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “கேப்டன் மில்லர்” படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்துன் தனது 50வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படியான நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இப்படியான நிலையில் 17 ஆண்டுகால காதல் வாழ்க்கை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன்பிறகு ஐஸ்வர்யாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கி ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள “லால் சலாம்” படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகன்கள் இருவருடன் ஐஸ்வர்யா தனது அப்பா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வருகிறார். அதேசமயம் மகன்கள் அவ்வப்போது அப்பாவுடன் வெளியே செல்வது, பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என தனுஷூடனும் தங்கள் நேரங்களை செலவிடுகின்றனர்.
இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். 17 வயதான அவர் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் விலையுயந்த ஆர்15 பைக்கை ஹெல்மெட் அணியாமல் ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து சென்னை போக்குவரத்து போலீசார் தனுஷின் வீட்டுக்கு சென்று அவரது மூத்த மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதை சுட்டிக்காட்டி ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் யாத்ரா பயிற்சியாளர் உதவியுடன் பைக் ஓட்டி பயிற்சி எடுத்துள்ளார் என அவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் தவறு யார் செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.